தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்யும் செல்லூர் ராஜூ பெரிதாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய மாட்டார். தற்போது திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ


தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சர்ச்சை பேச்சுக்களுக்கு சொந்தக்காரர். அவர் பேட்டியளிக்கும் ஒவ்வொன்றும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்படும். அந்த அளவிற்கு அவரது பேச்சுக்கள் காரசாரமாகவும், நகைச்சுவையாகவும் அமையும். அதனால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் இவர் பேவரைட். கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் போது, வைகை அணையில் தெர்மாகோல் வைத்து மூடிய திட்டம் சீன பத்திரிகைகளில் கூட வந்தது. இதனாலேயே அவர் பேசும் சின்ன விசயங்கள் கூட மக்களிடம் விரைவாக சென்றுவிடும். இந்த நிலையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


 






நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில், பா.ஜ.க 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கீழ் செயல்படும், சில மாநில கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அதைதொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மோடி நேற்று பதிவேற்றார். அவரோடு சேர்த்து 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட, 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தேர்தலுக்கு முன்னறே பி.ஜே.பி., கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., விலகிக் கொண்டது. இதனால் தமிழகத்தில் பி.ஜே.பி., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் பி.ஜே.பி.,யோடு எப்போதும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துள்ள தி.மு.க., நிர்வாகியின் வீடியோவை செல்லூர் ராஜூ பகிர்ந்துள்ளார். வீடியோவில் ”தமிழகத்தில் போடப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக” பேசியுள்ளனர். அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த செல்லூர் ராஜூ "புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி MP கள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம் .!!!" - என குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் வட்டாரங்கள் கருத்து


”தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்யும் செல்லூர் ராஜூ பெரிதாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய மாட்டார். தற்போது திமுக.,விமர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்”. என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


ராகுல் காந்தி குறித்த போஸ்ட்


கடந்த சில வாரங்களுக்கு முன் ராகுல் காந்தி ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும் வீடியோ ஒன்றை செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் ”நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி’ என்று அதில் குறிப்பிட்டு வெளியிட்டுருந்தார். அது சில மணி நேரங்களிலேயே ட்ரெண்டான நிலையில் அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.