PM Modi Cabnet: மத்திய அமைச்சரவையில் இலாகாக்களை ஒதுக்குவதில், கூட்டணி கட்சிகளால் பாஜக நெருக்கடியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மோடி தலைமையில் அமைச்சரவை..!


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில், பாஜக 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கீழ் செயல்படும், சில மாநில கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அதைதொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மோடி நேற்று பதிவேற்றார். அவரோடு சேர்த்து 30 கேபினட் அமைச்சர்கள் உட்பட, 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.


ஒதுக்கப்படாத இலாகாக்கள்..!


மோடி தலைமையிலான அமைச்சரவையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, இந்துஸ்தன் அவாம் மோச்சா, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைதொடர்ந்து, மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டமும் தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது வரை யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படாதது சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவும் பாஜகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.






சிவசேனா போர்க்கொடி:


மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 எம்.பிக்களை கொண்டுள்ளது. ஆனால், அக்கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இரே ஒரு இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரண்டு எம்.பிக்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே ஒரு எம்.பி., ஆன ஜிதன் ராம் மஞ்சிக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 7 எம்.பிக்களை கொண்ட தங்களுக்கு, ஒரே ஒரு இணையமைச்சர் பதவியா என, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி நிர்வாகிகள்போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


காங்கிரஸ் கேள்வி..


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிரதம மந்திரி பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே நடுக்கம்!” என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., ஆன மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள்ள டிவிட்டர் பதிவில், “இலாகாக்களை ஒதுக்குவதில் தாமதம் ஏன்? பங்குச்சந்தை ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் இருவர் பதவி தருமாறு மோடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்களா? இந்த ஊழலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களில் ஒருவரை மோடி நிதியமைச்சர் ஆக நியமிப்பாரா?” என குறிப்பிட்டுள்ளார்.


நெருக்கடியில் பாஜக?


நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர், வலுவான இலாகாக்கள் தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என கோரி வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் எனவும் பொதுவெளியிலேயே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பாஜக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.