உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தர மறுத்த பெற்ற தாயை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயை கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைசி விவசாயி படத்தில் நடித்தவர்
விஜய் சேதுபதி நடிப்பில் எம். மணிகண்டன் இயக்கத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ’கடைசி விவசாயி‘ திரைப்படம். முன்னதாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார் ஆனால் அவை காக்கா முட்டை படத்தின் வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில் கடைசி விவசாயி படத்தில் நடித்த காசம்மாளை மது அருந்த பணம் கொடுக்கவில்லை என அவரது மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரமபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது போதைக்கு அடிமையான மகன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த ஆனையூரைச் சேர்ந்தவர் பாலுச்சாமி மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நமகோடி, தனிக்கொடி என்ற 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் நமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 வருடத்திற்கு மேலாக தாய் தந்தை வீட்டிலேயே வசித்து வருவதாகவும், மது போதைக்கு அடிமையான நமகோடி அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தாய் காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார், பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாகமாக உயிரிழந்த நிலையில், ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த காசம்மாளைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் காசம்மாள்-ன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பெற்ற தாயை அடித்து கொன்ற மகன் நமகோடியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்த பணம் தர மறுத்த தாயை மகன் கட்டையால் அடித்து படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - அயன் பட பாணியில் துபாயிலிருந்து 1 கிலோ தங்கம் மலக்குடலில் கடத்தி வந்த நபர் கைது
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” - ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!