திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் ஓடும் பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்த 100 நாள் வேலை திட்டம் பணிதள பொறுப்பாளரின் 2 குழந்தைகளை நேற்று விஷப்பாம்பு கடித்தது. இதில் சிகிச்சையில் இருந்த ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு ஆபத்து நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை அடுத்த மையிட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன். இவரது மனைவி நாகலட்சுமி (35). கணேஷன் கோவையில்  பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகபிரியா, சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளன. நாகலட்சுமி மையிட்டான்பட்டி கிராமத்தில் 100- நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக இருந்தவர்.  நாகலட்சுமிக்கு அதே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மற்றும் கிளார்க் ஆகியோர் சேர்ந்து பணி செய்வதில் இடையூறு செய்ததால் மன விரக்தியடைந்து கடந்த 50 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க சென்றபோது சிவரக்கோட்டை பகுதியில் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவியை இழந்த கணேசன் ஐந்து பெண் குழந்தைகளுடன் கிராமத்தில் வசித்து வருகிறார்.

 


 

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கணேசன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது இந்த தம்பதியினரின் 2-வது குழந்தை 9 வயது விஜயதர்ஷினி மற்றும் 4 வயது குழந்தை சண்முகபிரியா இருவரும் தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துள்ளனர். அப்போது அங்கிருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு குழந்தைகள் இருவரையும் தீண்டியுள்ளது. 



 

பாம்பு கடித்ததில் குழந்தைகள் இருவரும் கூச்சலிட்டு மயங்கி கிடந்தன. தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய கணேஷன் குழந்தைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில் 4 வயது சண்முகப்பிரியா சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து தாய் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது பாம்பு கடித்து 4 வயது குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரையும், கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.