மதுரை கொட்டம்பட்டி ஒன்றியத்தில் பிரதமர் வீடு திட்டம், ஆழ்துளை கிணறு, தனிநபர் கழிப்பிடம் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடையை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான 1.5 கோடி ரூபாயை பெற்று அரசிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார். மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரில் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள ஆய்வு செய்தார்.



இதில்  கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமலேயே மத்திய, மாநில அரசுகளின் திட்டமான பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் கழிப்பறை, ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிமராமத்து பணிகள், தார்சாலை, புதிய கட்டிடங்கள் கட்டியது என பல்வேறு துறைகளிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதில் 1 கோடி முறைகேடு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் முறைகேட்டில் ஈடுபட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள 12 பேருடைய ஒப்பந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.



 

இந்நிலையில் முறைகேடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பார்வையிட்டு ஆய்வுசெய்து முறைகேட்டிற்கு துணையாக செயல்பட்ட ஓவர்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும், முறைகேடு மூலமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 1.5 கோடி ரூபாயை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலர் அசாருதீன்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இது குறித்து பேசிய அசாருதீன்,”கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, முறைகேடு மூலமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 1.5 கோடி ரூபாயை அரசு வசூலிக்க வேண்டும்” எனக் கூறினார்.

 




 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர