இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறியதால் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பில் சேர்க்க முடியாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


இட ஒதுக்கீடு:


ஏற்கனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. - நீதிபதி


*மதசார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர்அலி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்.  நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.


2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன். இறுதி தேர்வு பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.  தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்.


என்னை பி.சி. முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார்.  அவரது உத்தரவை ரத்து செய்து என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,


"தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.  மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் மதம் மாறியுள்ளார், அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர அந்த சான்றிதழில் வேறு எதும் இல்லை.  மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது.


வழக்கு தள்ளுபடி:


அப்படியிருக்கும் போது மதசார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார்? என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது. எனவே, மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான். அதில் தலையிட முடியாது" என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.