கச்சத்தீவை தாரை வார்த்தது கொடுத்தது குறித்து உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது. எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்தது வரலாற்று பிழையாக உள்ளது என பெருங்காமநல்லூரில் டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.

 

கைரேகை சட்ட போராளிகள்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில். தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படும் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 16 பேரின் 103-வது நினைவு தினம் இன்று அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், என்டிஏ கூட்டணி கட்சியின் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.டி.வி தினகரன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகளால் மலர் வளையம் வைத்து அனுசரிக்கப்பட்டது.

 

டி.டி.வி., தினகரன் செய்தியாளர் சந்திப்பு

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “2000 ஆம் ஆண்டு எம்.பி ஆக இருந்த போதிலிருந்து இந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன் இன்றும் அஞ்சலி செலுத்த இந்த வாய்ப்பை இயற்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் ஒரு சில பகுதிகளுக்கு பெயர் வைப்பதால் அவர்களுக்கு சொந்தம் ஆகிவிடாது.  அவர்களாக வெளியில் இருந்து கொண்டு பெயர் வைக்க வேண்டியது தானா. பெருங்காமநல்லூருக்கு என் பெயரை வைத்தால் ஏற்றுக் கொள்வார்களா அதெல்லாம் சும்மா. கட்சத்தீவு பிரச்சனையால் தினசரி மீனவர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது, அதற்கு மத்திய அரசு தினசரி பேசி விடுதலை செய்ய வைப்பது இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை சொல்கின்றனர்., உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது.

 

கச்சத்தீவு மீட்பு

 

1974 ல் அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையார் தாரை வார்த்துக் கொடுத்த போது எந்த எதிர்ப்பும் சொல்லாமல் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அதற்கு அனுமதி கொடுத்தார் என்பது வரலாற்று பிழையாக உள்ளது. இந்த பிரச்சனை காரணமாக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களை விடுவிப்பதையும் மத்திய அரசு தான் செய்து வருகிறது. கட்சத்தீவை மீட்பது குறித்து என்டிஏ கூட்டணி சார்பாக பிரதமர் மோடியே சொல்லியுள்ளார் நிச்சயமாக நாங்கள் செய்வோம்” என பேட்டியளித்தார்.