திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விஜயகுமார், முருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,  நாங்கள் ஒட்டன்சத்திரம் வார்டு எண் 18 மற்றும் 16 ஆகியவற்றில் கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் எங்கள் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.  இதை ரத்து செய்து நாங்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன்ராமசாமி அமர்வு, "மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டதாக கூறுகின்றனர். அவர்கள் இருவரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்ததை எதிர்த்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

 

தேர்தல் அதிகாரியின் நிராகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க உரிமை இருந்தாலும், உரிய சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையும், இந்த ரிட் மனுவும் வேறுபட்டவை. இந்திய அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 226 ன்கீழ் உள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தலாம் என்றாலும், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி என்னென்ன செய்யக்கூடாது என்பதும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த மனுக்களை ஏற்க இயலாது. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என உத்தரவிட்டுள்ளனர்.

 

 



விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 5 சவரன் விவசாய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2021 நவம்பர் 1ஆம் தேதி 5 சவரன் விவசாய நகை கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.


இது அரசுக்கு கூடுதல் சுமையாகவே அமையும். கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு வங்கி இல்லாததால், பலர் பொதுத்துறை வங்கிகளிலேயே நகையை அடகு வைத்துள்ளனர். அதோடு, வட்டியை முறையாக கட்டாதவர்களுக்கே இந்த தள்ளுபடி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டுறவுத்துறை முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான புகார்களும் உள்ளன. ஆகவே, 5 சவரன் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதோடு, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.