கொடைக்கானல் மலை பகுதிகளில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வெளியூர்களுக்கு சென்று திரும்பும்  சரக்கு வாகனங்களின் கட்டணத்தை லாரி உரிமையாளர்கள் சங்கம் உயர்த்தி உள்ளதால் விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சுற்றுலா தலமாகவும் மலைகள் அதிகம் சூழ்ந்த மலைப்பிரதேசமாகவும் திகழ்கிறது.  இந்த பகுதியை சுற்றி சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமபுற பகுதிகள் உள்ளது, இந்த பகுதிகள் முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே பிரதானமாக இருந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் , பழங்கள் மற்றும் பூக்கள் வகைகளை விற்பனை செய்ய அதிகமாக திண்டுக்கல் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



கொடைக்கானல் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் விவசாய தேவைகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் அதிகமாக சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிற சூழலில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் நேற்று முதல்   அதிகபட்சமாக 1 லிட்டர் பெட்ரோலின் விலை 100ரூபாய் 4 பைசாவுக்கும்  டீச‌ல் விலை  93 ரூபாய் 92 பைசாவிற்கும்,  ஸ்பீடு பெட்ரோல் 102 ரூபாய் 83 பைசாவிற்கும் பெட்ரோல் ப‌ங்குக‌ளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுகிற‌து. இதனையடுத்து கொடைக்கானலில் விளைவிக்கப்படும் அனைத்து மலை காய்கறிகளும் மதுரை,திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,



மேலும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் திண்டுக்கல்,மதுரை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து கொடைக்கானலுக்கு லாரிகள் மூலம் வரவழக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கட்டணங்களின் விலை நிர்ணயம்   உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தினர் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளனர், கடந்த மாதத்தில் கேரட், உருளை கிழங்கு, பீன்ஸ் மூட்டைகள் 50 ரூபாய்க்கு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய் முதல் 100 வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது,  மேலும் வெளியூர்களிருந்து சரக்கு வாகனங்களில்  வரும் பெட்டிகளின் விலையும்  100 ரூபாய் வரை விலை  நிர்ணயக்கப்பட்டுள்ளதால் மலை கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிஅடைந்துள்ளனர். 



கொடைக்கானலில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு கொரோனா ஊரடங்கால் உரிய விலை கிடைக்காத நிலையில் தற்போது  லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக  பொதுமக்கள் கவலையுடன் கூறுகின்றனர், இதனை மத்திய அரசும்,மாநில அரசும் கவனம் செலுத்தி பெட்ரோல்,டீசல் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு பல நாட்களாக வேலையின்மையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் பெட்ரோல் , டீசல் விலை ஏற்றம்  காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய ஏற்றமதியாகும் போக்குவரத்து செலவுகள் ஏற்றம் என கடுமையான சிக்கலில் உள்ளதாக விவசாயிகளும் ,வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.