தமிழக-கேரள எல்லை மாவட்டமான தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்குள் செல்ல குமுளி, கட்டப்பனை, போடிமெட்டு உள்ளிட்ட மலைவழிச்சாலைகள் உள்ளன. கேரள மாநிலத்தில் ஏலக்காய், தேயிலை தோட்ட வேலைகளுக்கு தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். குறிப்பக தேனி மாவட்டம் போடி, கோம்பை, கம்பம், கூடலூர் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அதிகளவில் கேரளாவிற்கு சென்று வருகின்றனர்.
மேலும் கேரள மாநிலத்தவர்களும் தங்களது அத்யாவசிய தேவைகளுக்கு அருகில் உள்ள தேனி மாவட்டத்திற்கு வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் வழியில் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளுக்குள் மலைவழிச்சாலை வழியாகவே வரவேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியை கடந்து வருவதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் சாலையை கடக்கவோ அல்லது சாலையில் திரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அவ்வாறு மலைவழிச்சாலை வழியாக வரும்போது சில நேரங்களில் வன விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படும்போது வனவிலங்குகள் வாகனங்களை தாக்குவதும் நடந்து வருகிறது. அவ்வப்போது சில உயிர்பலிகளும் ஏற்படுகிறது .
மூணாறு, போடி மெட்டு, தேவாரம், கொடைக்கானல் உள்ளிட்ட கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுயானைகள் அதிகம் இருப்பதால் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதும், வரும் காட்டுயானைகள் பல்வேறு பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி செல்கிறதும் தொடர் கதையாகி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சட்ட மூணாறு பகுதியை சேர்ந்த குமார், விஜி தம்பதியினர். உறவினருடைய வீட்டு விசேஷத்திற்காக கரூர் சென்று தேனி மாவட்டம், போடி மெட்டு வழியாக அதிகாலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் மூணாறு சென்று கொண்டிருந்தபோது மூலத்துறை அருகே சாலையைக் கடக்கும் முயற்சித்த ஒற்றை காட்டு யானையை கண்டு வாகனத்தில் திருப்ப முயற்சித்துள்ளனர். யானையை கண்ட பதற்றத்தில் குமார் வாகனத்தை கீழே விட்டு விட்டு ஓட முயற்சித்துள்ளனர் ஆனால் ஒற்றை காட்டு யானை இருவரையும் விரட்டி தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த விஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த குமாரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் மூணாறு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ச்சியாக பூப்பாறை மூணாறு சாலையில் ஒற்றை காட்டு யானையின் தாக்குதல் அதிகரித்து வருவதாலும் உயிர்பலி ஏற்படுவதாலும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகளை துரத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
குற்றங்களை தடுக்க வனத்துறையில் வெளிநாட்டு நாய்களுக்கு பதிலாக நாட்டு நாய்களுக்கு பயிற்சி...!