கேரள மாநிலம்

   கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த   பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று   நபர்கள் தன்னை வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கண்ணூர் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை  மேற்கொண்ட போது கடந்த 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும்  சென்றதாகவும், அப்போது  பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது   தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்ட  நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச்சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.



பின்னர்  தன்னைத்   தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும்    விடுதியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார், தங்கும் அறையில்  இருந்து  தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறியதாகவும், கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில்    புகார் கொடுக்கவும் சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்து    விரட்டி அடித்ததால் வேறு   வழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாகவும் தெரிவித்தார். பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.



இன்னிலையில் இந்த  சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த கேரள போலிசார் விசாரணையில் கேரள டிஜிபி அணில் காந்த் தமிழக டிஜிபிக்கு இந்த பாலியல் வழக்கு குறித்து விசாரணை செய்ய கடிதம் எழுதிய நிலையில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியாவுக்கு இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து,  கேரள பெண் பழனிக்கு வருகை தந்தபோது பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 365 மற்றும் 376D ஆகிய கடத்தல் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 


இந்த வழக்கு தொடர்பாக பெண் காவல்ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவின் நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும் என்றும் தெரிவித்தார்.


மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது,



இருந்தபோதிலும் கேரள பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்கில் கேரள போலீசாருடன் இணைந்து முழுவிசாரணை செய்வோம்  என்றும் தெரிவித்தார்.  மேலும் இந்த பாலியல் வழக்கை விசாரிக்க ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளா விரைந்துள்ளதாக தெரிவித்தார்.