Keeladi Excavation: கீழடி விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு!

விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு குழியை தோண்டி உறைகிணறு போன்ற அமைப்பின் உயரத்தை அறிய தொல்லியல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Continues below advertisement

கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழ்நாடு மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது. கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது கீழடியில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பாக 7-ம் அகழாய்வுப் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. கீழடி, கொந்தகை அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 13-ம் தேதி துவங்கி செப்டம்பர் வரை தொல்லியல் ஆய்வு செய்யப்பட்டது. 

Continues below advertisement

கீழடியில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், சுமார் ரூ.12 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் அப்படியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ்வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் கீழடியில் அகழாய்வு செய்த இடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கீழடியில் விளைநிலத்தில் தண்ணீர் வெளியேற்ற தோண்டிய குழியில் உறைகிணறு போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.


கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அறுவடை பணிக்காக தண்ணீரை வெளியேற்ற 7 அடி ஆழத்தில் விவசாயிகள் குழி அமைத்தனர். அந்த குழியில் உறைகிணறு போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் உத்தரவில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு குழியை தோண்டி உறைகிணறு போன்ற அமைப்பின் உயரத்தை அறிய தொல்லியல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 
 
Continues below advertisement