தேனி மாவட்டம் கம்பம் நகரில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து இரண்டு சிறுவர்கள் மற்றும் வெடிகுண்டு தயாரித்த முதியவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தங்க விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் குருநாதன். இவர் தனது  மகன்களின் பேரன்கள் ரித்தீஷ் (வயது 7) அபினவ் (வயது 5) மற்றும் தனது மனைவி மயில் அம்மாள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் திடீரென வெடி சத்தம்  கேட்டு சிறுவர்கள் அலறல் சத்தம் அந்த சத்தத்தினை கேட்ட அக்கம் பக்கத்தினர்  அவரது வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த குருநாதன் மற்றும் ரித்தீஷ் அபினவ் ஆகிய இரு சிறுவர்கள் கை கால்களில் பலத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அவர்களை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அம்மோனியம் நைட்ரேட் மூலம் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். படுகாயம் அடைந்த சிறுவர்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குருநாதன் ஆகியோருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கம்பம் வடக்கு போலீசார், அவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக  நாட்டு வெடிகுண்டு தயாரித்திருக்கலாம் இன்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்களையும் அதற்காக வெடி மருந்துகளை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்றும் வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தனர். கம்பம் நகர் பகுதியில் பயங்கர சப்தத்துடன் இரவு நேரத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதால் குடியிருப்பு வாசிகள் மேலும் ஏதேனும்  அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.