கோயில் நகரம் பண்பாட்டுத் தளம் தூங்கா நகரம் என சிறப்பு பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவும் மிகப்பெரிய அடையாளமாக இருந்து வருகிறது புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் ஒரு விழாவாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்ட நிகழ்வும் நடைபெற்றது. இந்நிலையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
காலை 6.11 மணி மணிக்கு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு தங்கக்குதிரையில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் வழிபட்டபோது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் விண்ணை முட்டியது. முன்னதாக வைகையாற்றுக்கு கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்து அழைத்தார். தொடர்ந்து வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளிய பின்னர் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மண்டபபடியில் எழுந்தரளிய கள்ளழகர் 3 முறை மண்டப படியை சுற்றி உலா வந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினால் வானம் மும்மாரி பெய்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கள்ளழகர் ஆற்றில் எழுந்தருழும் நிகழ்வை தொடர்ந்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து அவரை மகிழ்விப்பார்கள். நாளை மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் இரவு தசாவதாரம் நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்ற நிலையில் 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம், இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. விழாவினையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும் செய்யபட்டது, 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Chithirai Thiruvizha: கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க நடந்த கள்ளழகர் எதிர்சேவை