மண்டல போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து, விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதிகளவில் அபராதங்களை விதிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


கரூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வாகனங்களில் எண் பலகை பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்காக வைக்கப்படுகிறது. இந்த எண் பலகை  தொடர்பாக மோட்டார் வாகனச்சட்டம் பல்வேறு வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இவற்றை மீறும் விதமாக கரூர் மாவட்டத்தில், ஏராளமான வாகனங்களில் எண் பலகையில் அரசியல் கட்சித்தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவை பல நேரங்களில் சட்ட விரோத செயல்களுக்கும் வாய்ப்பளிக்கின்றன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இந்திய மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 50,51ஐ மீறும் வகையில், ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை மண்டல போக்குவரத்து அலுவலர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அது விதிமீறல் இல்லையா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து, வாகன எண் பலகையில் அரசியல் கட்சித்தலைவர் படங்களை ஒட்டுவது உள்ளிட்ட மோட்டார் வாகன விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதிகளவில் அபராதங்களை விதிக்கவும் உத்தரவிட்டு வழக்கை  முடித்து வைத்தனர்.




மற்றொரு வழக்கு

 

விருதுநகர், நரிக்குடி, முக்குலம் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களுக்கு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க கோரிய வழக்கு குறித்து தமிழக வருவாய்துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரைகிளைகள் தாக்கல் செய்த மனு.அதில், "மருது சகோதரர்கள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள். இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி இறுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.மருது சகோதரர்களின் படைகள் குறித்து "வளரி" என்ற ஆங்கிலேய புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மருது சகோதரர்கள் பல கோவில்கள் கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கியுள்ளனர். மருது சகோதரர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக முக்குலம் கிராமம், நரிக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தேன்.

 

ஆனால் அதனை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எனவே, மருது சகோதரர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க கொடுத்த மனுவை ரத்து செய்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக வருவாய்துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.