மதுரை உசிலம்பட்டியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மல்லிகை பூவுக்கு பெயர் பெற்ற இடமே மதுரை தான். மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூபாய் 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால் தேனி மாவட்ட ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வளர்பிறை முகூர்த்தத்தில் வரக்கூடிய கடைசி முகூர்த்தம் என்பதால் மக்களிடையே மல்லிகைப் பூவுக்கான தேவையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மல்லிகைப் பூ 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகாமரம் கிலோ ரூபாய் 1,500க்கும், முல்லைப் பூ கிலோ ரூபாய் 1,400க்கும், ஜாதிப் பூ கிலோ ரூபாய் 1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் மல்லிகைப் பூவின் வரத்து குறைந்து கொண்டே வருவதாலும், மக்களின் தேவை அதிகரிப்பதாலும், இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் மதுரையில், ஒரு கிலோ மதுரை மல்லி ரூபாய் 3 ஆயிரத்தில் இருந்து 3,500க்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 1,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ முல்லைப் பூ ரூபாய் 1,500க்கும், மாலை கட்ட பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ சம்மங்கி பூ கிலோ ரூபாய் 300க்கும், செண்டு மல்லிப்பூ கிலோ ரூபாய் 80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பட்டன் ரோஸ் கிலோ ரூபாய் 250க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பூ வாங்க மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்கள் ’பூவுக்கு மட்டும் விலையச் சொல்லுங்க, உங்க கடைக்கு யாரு விலைய கேட்டாங்க’ எனவும், ’பூவுக்கு விலையக் கேட்டா தங்கத்து விலைய சொல்லீட்டு இருக்கீங்க என்றும் கூறி வேறு வழியே இல்லாமல் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து ஒரு கிலோ மல்லிகைப் பூவை வாங்கிச் செல்லுகின்றனர்.
தங்கத்தினை தாண்டிய மல்லிகை
தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூபாய் 40,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5,016க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்றைக்கு ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5,500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ. 40,128 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.5,016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,418 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ரூ. 70.60 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.71,600ஆக விற்பனையாகிறது. சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,160 ஆகவும் தங்கம் கிராமுக்கு ரூ.5,020 ஆகவும் விற்பனையானது.