ஜல்லிக்கட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் அரசியல் ஆக்க கூடாது என்று மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிகப்பட்ட மாடு பிடி வீரர் அபி சித்தர் பேட்டியளித்தார்.


காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி கடந்த 17-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 810/காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம்கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறிடித்து காளைகளே அதிகளவிற்கு  ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது. போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு  7லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோன்று களத்தில் சிறப்பாக விளையாடிய திருச்சி மாவட்டம் மேலூர் குணா என்பவரது  காளை உரிமையாளருக்கு 7 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் காரும் பரிசாக வழங்கப்பட்டது.




இதையடுத்து 2வது இடம்பிடித்த மாடுபிடி வீரரான 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரருக்கு பைக் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பரிசு அறிவிப்பில் அமைச்சரின் சதி நடந்துவிட்டதாக கூறி பரிசை வாங்க மறுத்து புறக்கணித்து சென்றார். இந்நிலையில் பரிசை வாங்கமறுத்த அபிசித்தர் இது தொடர்பாக  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.





 

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என புகார் மனு அளித்த அபி சித்தர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டதாகவும், முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு மூன்று சுற்றுகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கமிட்டியிடம் நான் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எனவே இதுகுறித்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறேன் எனவும் வீடியோ பதிவுகளை பார்த்து இறுதிச்சுற்றில் மாடுகள் பிடிக்கப்பட்டதை எண்ணினால் யார் வெற்றி பெற்றார் என தெரியவரும், விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் அரசியல் ஆக்க கூடாது என்றும், வரும் 24 ஆம் தேதி கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க வருகை தரும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.