மாற்று சமுதாயத்தில் காதல் திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தை கடந்த பத்து ஆண்டுகளாக ஊரை விட்டு கிராமத்தினர் ஒதுக்கி வைத்த சம்பவம் ராமநாதபுரம் அருகே அரங்கேறியுள்ளது. வீட்டிற்கும், தென்னந்தோப்பிற்கும் செல்லும் பொது பாதையையை  அடைத்து வைத்து 30 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர் கூட்டத்தில்  மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகேயுள்ள தெற்கூரைச் சேர்ந்த பரமேஸ்வரன், உமாவதி தம்பதியினர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். வாலாந்தரவை அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்த உமாவதி வேலைதேடி  பொள்ளாச்சிக்கு கூலி வேலைக்கு சென்ற போது, பொள்ளாச்சி பகுதி பட்டியலினத்தை  சேர்ந்த  பரமேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இதில், ஆரம்பத்தில் பரமேஸ்வரன் வீட்டில் இருவரையும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில் ஒரு சில மாதங்கள் கழித்து திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே போல உமாவதி வீட்டிலும் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து பரமேஸ்வரன், உமாவதி தம்பதியர் பொள்ளாச்சி பகுதியில் போதிய வருமானம் இல்லாததால் உமாவதியின் சொந்த ஊரான  ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கூர் கிராமத்திற்கு வந்த இருவரும், தென்னங்கீற்றை பின்னி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.



இந்த நிலையில்,  பரமேஸ்வரன் உமாவதி தம்பதியினர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால், தெற்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு  ரூ. 30ஆயிரம் அபராதம் விதித்ததாகவும் அதை உமாவதியின் தாய் முத்துராக்கு தனது பசு மாட்டை விற்று அபராதத்தொகையை  கட்டியதாகவும்  கூறுகின்றனர். ஆனால், அபராதம் கட்டிய பின்னரும் காதல் திருமணம் செய்த தம்பதியினரையும், அவர்களுக்கு ஆதரவு அளித்த அவரது தாய் வீட்டாரையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததோடு, அங்குள்ள கோயிலில் சாமி கும்பிடவோ, பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவோ, ஊரில் நடக்கும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் கிராமத்துக்காரார்களால் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.



இதனால், தற்போது வரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், உமாவதிக்கு நகை உள்ளிட்ட சீர்வரிசைகள் செய்யப்படாமல் இருந்ததால் அதற்காக கடந்த மாதம் உமாவதியின் தாய் முத்துராக்கிற்கு சொந்தமான ஊருக்குள் உள்ள 36 சென்ட் நிலத்தை தனது மகள் உமாவதிக்கு கிரயமாக எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து பரமேஸ்வரன், உமாவதி தம்பதியினர் சொந்த இடமான அந்த  இடத்திற்கு குடியேறக் கூடும் என்ற நோக்கத்தில் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும் பொது பாதையை கருவேல முள் செடிகளை கொண்டும், பனைமரம் மட்டையை வைத்தும் அடைத்து உமாவதியின் தாய் முத்துராக்கு வீட்டிற்கும், தென்னை தோப்பிற்கும் செல்ல விடாமல் தடுத்து பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது.



 


இதையடுத்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து முள்வேலியை மட்டும் தற்போது அகற்றியுள்ளனர். மேலும் தாங்கள் கிரையம் வாங்கிய இடத்தை அபகரிப்பு செய்வதற்காக தீண்டாமை வேலி அமைத்து எங்களை கொடுமைப் படுத்தி வருவதாக அந்த தம்பதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 17ஆம் தேதி பரமேஸ்வரன் தான் வாங்கிய தென்னந்தோப்பிற்கு சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஒருசிலர் அவரை சாதியைச் சொல்லி திட்டி பயங்கர ஆயுதத்துடன் தாக்க வந்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் 5 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



இதையடுத்து காதல் திருமணம் செய்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக  ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதனையடுத்து, தெற்கூருக்கு வந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தோப்பிற்கு செல்லும் பாதையை அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமில்லாமல் அங்கு அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அடிப்படை உரிமைகள் குறித்தும் ஆய்வு செய்து கேட்டறிந்தார். மேலும் நாம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அரசு விஷயத்தில் கவனம் செலுத்தி இதுபோன்ற சமூகநீதி மறுப்பு  சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.