ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த டோமினிக் ரவி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக அரசின் மரமாக பனைமரம் உள்ளது. பனைமரம் கடலோர மாவட்டங்களில் மண் அரிப்பைத் தடுக்கிறது. வறட்சியைத் தாங்கக் கூடியதாக உள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பிளாட்டுகள் போட்டு விற்பதற்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் வணிக நோக்கிலும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும் பனை மரங்கள் வெட்டபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் பனைமரங்களை நட்டு பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,"பட்டா நிலங்களில் சில பனைமரங்கள் வெட்டப்பட்டு உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது நீதிபதிகள், "பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து  அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என கேள்வி எழுப்பினர். மேலும் வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களுக்கு தண்ணீர் சரிவர சென்று அடைய வில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான அளவு தமிழகத்தில் மழை பொழிவு இருந்துவருகிறது. ஆனால் அதனை சேமிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி   எழுப்பினர். தொடர்ந்து விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் பொழுது விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 



சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் - அடுத்தகட்ட  விசாரணை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஸ்வாதியை காதலித்துவந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு  சிறப்பு தனி நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சம்பத்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும்10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கடந்த 6ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கானது இறுதி்கட்ட விசாரணையை எட்டியுள்ள நிலையில்  வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில்  காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.