திண்டுக்கல் அருகே உள்ள மாவட்டங்களில்,  ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் இல்லாததால், இரு மாவட்ட எல்லையில்  உள்ள அரசு மதுபான கடையில் குடையுடன் குவிந்துவருகிறார்கள் மதுபிரியர்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக அதனை தடுப்பதற்கு நோயிலிருந்து மக்களை காப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளால் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.



திண்டுக்கல் மாவட்டத்தை ஒட்டியுள்ள சேலம், கருர், ஈரோடு , கோயம்பத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறையாமல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் இல்லாததால், மதுக்கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்கள் வங்குவதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் குடையுடன் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்க வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மடத்துக்குளம், உடுமலை  உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு  மதுப் பிரியர்கள் படையெடுத்துள்ளனர். மதுபிரியர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் கூட்டம் அதிகமாகக்கூடுவதை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




தற்போது மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு இல்லாத நிலையில், மதுக்கடையில் கையிருப்பு இருக்கும் மதுபாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு மதுப்பிரியர்கள் வாங்கி வருகின்றனர். மதுக்கடைக்கு வருவோர்கள் கையில் குடையுடன் வந்தால் மட்டுமே மது பாட்டில் தரவேண்டுமெனவும் பாட்டில்கள் வாங்க வருவோர்கள் ஆதார் கார்டு கொண்டு வந்தால் மட்டுமே மது பாட்டில் வாங்கிக்கொள்ளலாம் என  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்கள் வாங்க கடைக்கு வருவோர்கள் குடையுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது. குடையுடன் வருவோர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், மது பாட்டில் வாங்க வருவோருக்கு  குறிப்பிட்ட அளவு  மட்டுமே மதுபாட்டில்களை மட்டும் வழங்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில்  ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகளுக்கு பின் திறந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் வருமானம் 10 கோடிக்கு மேல் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.