தமிழர்களின் பல்வேறு வகையான குடும்ப நிகழ்ச்சிகளில் முக்கியமாக தாய் மாமனை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியாக கருதப்படுவது சகோதரியை மகளின் காதுகுத்து நிகழ்ச்சி. குறிப்பாக தென் மாவட்டங்களில் இது போன்ற நிகழ்ச்சி பெரிய அளவில் பழங்காலங்களிலிருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாய் மாமன் கிடா மற்றும் அண்டா பானைகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு அதிக அளவில் மாலைகளையும் சீர்வரிசை தட்டுகளையும் வான வேடிக்கை முழங்க சகோதரியின் மகள் அல்லது மகன் காது குத்து நிகழ்ச்சியில் தங்களது செய்முறைகளை செய்ய, அப்போது ஊரே வியக்கும் அளவில் நீண்ட வரிசையில் பெண்கள் தாம்பூல தட்டுகளை ஏந்தி ஒவ்வொரு தட்டுகளிலும் பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக வருவார்.
அப்போது அவரவர் வசதிக்கு ஏற்ப குதிரை, யானை, மாட்டு வண்டி, தப்பாட்டம், குயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மேலதாளம், சரவெடி என காதுகுத்து விழா ஊர்வலம் நடைபெறும். அப்போது பகுதியே மிகப்பெரிய ஊர் திருவிழா போல் காட்சி அளிக்கும். காலப்போக்கில் நவீனமயமாதல் என்ற பெயரில் இது போன்ற விழாக்கள் குறைந்து சிறிய மண்டபத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்று நடத்தும் அளவிற்கு நம் பாரம்பரியம் மாறியது.
இந்நிலையில் பல நூறாண்டு பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவரும் வகையில் வண்ணம்பட்டி பகுதியில் பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம் என மிகப் பெரிய அளவில் திருவிழா போல் மாட்டு வண்டிகளில் சீதன பொருட்களை ஏற்றி வான வேடிக்கைகள் முழங்க பிரம்மாண்டமான அளவில் காதுகுத்து நிகழ்ச்சியில் செய்முறை செய்ய வந்த மாமன்களின் ஊர்வலத்தை கண்டு அப்பகுதியினர் மெய்சிலிர்த்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு பிரதீக்ஷா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது. ஹேமலதா உடன் பிறந்தவர் இரு சகோதரர்கள் ஆவார்கள். அதில் மூத்த சகோதரர் குமார் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில் பிரதிக்ஷாவுக்கு நேற்று காதணி விழா வண்ணம்பட்டியில் நடைபெற்றது.
இந்தக் காதணி விழாவில்தான் அந்த கால முறைப்படி பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற நாட்டுப்புற கலைகள் புடை சூழ சுமார் 150க்கும் சீதன தட்டுகள், சுமார் 4 மாட்டு வண்டிகளில் அந்தக் கால முறைப்படி சீதனமாக ஊர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் இந்த ஊர்வலத்தில் காதை பிளக்கும் வானவேடிக்கைகளும் இடம் பெற்றிருந்தன.
மேலும் இதுகுறித்து தாய் மாமன்கள் மற்றும் ஹேமலதா கூறுகையில், நாங்கள் தமிழர்கள் முறைப்படி அதுவும் குறிப்பாக பாரம்பரிய முறைப்படி எங்கள் குழந்தைக்கு காதணி விழா நடத்த வேண்டும் என்று விரும்பினோம், ஆகையால் நாட்டுப்புற கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பதாகவும், மிகவும் பெருமையாக தெரிவித்தனர். இதுபோல மற்ற அனைவரும் அழிந்து வரும் தமிழர்களின் கலைகளை காக்கும்படி வேண்டுகோளும் விடுத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்