மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த எஸ்.கிருஷ்ணாபுரம், குமாரலிங்காபுரம், சோலைபுரம், டி.பாறைக்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரபெருமாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ - மாணவிகள்  செல்லும் அரசு பேருந்து தாமதமாக இயக்குப்படுவதாலும், போதிய நேரங்களில் இயக்கப்படாத நிலையில் மாலை நேரத்தில் பள்ளி நேரம் முடிவடைந்த நிலையிலும் நீண்ட நேரமாக மாணவ மாணவிகள் காத்திருப்பதன் காரணமாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்களது வீடுகளுக்கு நடந்து செல்லும் சூழல் உருவாகிறது.

 

காட்டுப் பன்றி உலா, மதுபிரியர்கள் கேலி:


இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லும் பகுதியில் மதுபான கடைகள் உள்ள நிலையில் அந்த வழியாக செல்லும் மாணவ மாணவிகளை மது பிரியர்கள் கேலி கிண்டல் செய்வதும் ஆபாசமான வார்த்தைகளிலும் பேசுவதால் மாணவ மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுவருகிறது. மேலும் மாணவ மாணவிகள் நடந்து செல்லும் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

 

இதனால் மாணவிகள் அரசு பள்ளிக்கு படிப்பதற்கு செல்வதற்கு தயக்கம் காட்டும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் மாணவிகள் வீடுகளிலே இருந்து விடுவதால் பெண் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே அரசு பேருந்துகளை பள்ளி நேரம் முடியும் நேரத்தில் இயக்கும் வகையில் பேருந்து இயக்க நேரத்தை மாற்றி விரைந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கூறி  3 கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர்.

பெற்றோர் கோரிக்கை


இது குறித்து பேசிய பெற்றோர்கள், ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் பேருந்து தாமதமாக வருவது குறித்து போக்குவரத்து துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் நாள்தோறும் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவிகள் நடந்து செல்லும் பகுதியில் உள்ள மதுபான கடைகளால் மாணவிகள் சிரமத்திற்கு ஆளாவதோடு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் அதே பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாடுவதால் மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உருவாகி வருகிறது.

 

 மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அரசு பேருந்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அரசுப் பள்ளியில் பயில வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பள்ளிக்கு தேவையான உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தயங்குகிறது.  இதனால் தங்களது பிள்ளைகளை வேறு வழியின்றி படிக்க பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை உருவாகி வருவதாகவும், சில மாணவ மாணவிகள் உடைய பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நிலைமையை அரசு உருவாக்குவதாகவும் தெரிவித்தனர்