கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டத்தை அறிவித்து கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினார்.




கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி 60 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 12 பேருக்கு கண் பார்வை பறிபோனது. பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதோடு, சாராயம் விற்ற கன்னுக்குட்டி உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது.




திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைக்கு நான் வனத் துறை அமைச்சராக இருந்தபோது சென்றிருந்தேன்.


எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்துகொண்டு இருந்தது. என்ன என்று கேட்டபோது, சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று கூறினர். இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இதையெல்லாம் தடுக்க மாட்டாரா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்களோ, உதயசூரியன் தயவில் தான் சாராயமே காய்ச்சுகிறார்கள். அவர்தான் தங்களுக்கு கடவுள் என்று தெரிவித்தார்கள்.




இரண்டு நாட்களுக்கு முன்பு கல்வராயன் மலையில் 15,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளச் சாராயத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன், தனது பதிலுக்கு பயந்துகொண்டுதான் அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக கூறுகிறார். அவர் வருவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டோம். நாங்கள் எதற்காக பயப்பட போகிறோம். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்து மட்டும் இருந்திருந்தால் உயிரிழப்பு 5 பேருடன் முடிந்திருக்கும். 60 பேர் வரை உயிரிழந்திருக்க மாட்டார்கள்.


ஆனால், கள்ளச் சாராயத்தால் நிகழ்ந்த மரணத்தை எப்படி உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மரணம் என்று சொல்லலாம். திமுக எப்படி 40 இடங்களைக் கைப்பற்றியதோ அதே வித்தையை கையாண்டு வரும் 2026 தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமர்வார்" என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.