மதுரை மாநகரில் 15 நிமிடம் சூறைக்காற்றுடன் வெளுத்துவாங்கிய கனமழை - 50க்கும் மேற்பட்ட மரங்கள், 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்து பலத்த சேதம் - கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்.

 

மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

 

மதுரையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவத்திருந்தது. இந்நிலையில் மதுரை மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு தாலுகா பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 4.20 முப்பது மணி முதல் 4.35 மணி வரை 15 நிமிடம்  சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அண்ணா பேருந்துநிலையம், முனிச்சாலை, கே.கே நகர், அண்ணாநகர், குயவர்பாளையம் மதிச்சியம் காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பழமையான 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகளில் விழுந்தது. மேலும் 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சாலைகளில் விழுந்து நொறுங்கியது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 


மரத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்


 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் மேல் புறத்திலிருந்து கைப்பிடி சுவர் இடிந்து கீழே விழுந்ததில் கீழே நிறுத்தப்பட்டிருந்த பைக் சேதமடைந்தது. இதேபோன்று மதுரை காமராஜர் பகுதியில் உள்ள அங்கன்வாடி சுற்றுச்சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட மாவட்ட வனத்துறை அலுவரின் கார் உள்ளிட்ட மூன்று கார் மற்றும் பைக்குகள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் சேதமடைந்தன. தல்லாகுளம் தீயணைப்புத்துறை அலுவலகம் முன்பாக மின்கம்பம் உடைந்ததால் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து மின் துண்டிக்கப்பட்டு தீயணைப்பு துறை வாகனங்கள், மரத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

 

15 நிமிடம் சூறாவளி காற்றுடன் கனமழையால் பலத்த சேதம் ஏற்படுத்தி சென்றது.

 

 முக்கியசாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் சூறாவளி காற்றுடன் கூடிய மழை காரணமாக சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பழமையான பெரிய அளவிலான மரங்கள் வேறுடன் சாய்ந்து விழுந்த நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றுவதற்காக செல்ல கூட முடியாத அளவிற்கு ஆங்காங்கே அதிக அளவிற்கான மரங்கள் விழுந்துள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.   மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெறும் 15 நிமிடம் பெய்த மழைக்கு 50க்கும் மேற்பட்ட மரங்கள், 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 நாட்களாக வரலாற்றில் இல்லாத வகையில் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென 15 நிமிடம் சூறாவளி காற்றுடன் கனமழையால் பலத்த சேதம் ஏற்படுத்தி சென்றது.