மதுரையில் செட்டிநாடு சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு - காவல்துறை விசாரணை.
எமனாய் வந்த செட்டிநாடு கிரேவி
மதுரை மாநகர் கோசாகுளம், மேலப்பனங்காடி ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (27). அவரது மனைவி சௌமியா மற்றும் தனது 7-வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். ஆனந்த்ராஜ் வீட்டிலேயே டிரேடிங் மார்க்கெட்டிங் பணி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு மேலப்பனங்காடி பகுதியில் உள்ள உணவகத்தில் ஆனந்தராஜின் தந்தை செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார்.
இதனை இரவு ஆனந்தராஜ் மற்றும் அவரது குழந்தையும் சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலையில் மீதம் இருந்த அதே சிக்கன் கிரேவியை சூடு செய்து ஆனந்த்ராஜ் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் ஆனந்த்ராஜ்க்கு வாந்தி வந்துள்ளது. இதையடுத்து பீ.பீ.குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
சிக்கன் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சோகம்
அதன்பிறகும் தொடர்ந்து வயிற்று போக்கு இருந்ததாகவும் மருந்து மாத்திரை வாங்கிவிட்டு, பின்னர் 28-ம் தேதியும் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மாலை, ’மயக்கம் வருவது போல உள்ளதால் மருத்துவமனை செல்ல வேண்டும்” என கூறி சேரில் அமர்ந்துள்ளார். இதையடுத்து வாகனம் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, ஆனந்த்ராஜின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக ஆனந்தராஜின் உடல் வைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். கடந்த 26-ம் தேதி கடையில் இருந்து இரவில் சிக்கன் வாங்கிச் சென்று மீதியிருந்த சிக்கனை அடுத்த நாள் காலையில் சிக்கனை சுடவைத்து சாப்பிட்ட நிலையில், இளைஞர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இதனிடையே சிக்கன் சாப்பிட்ட சிறுவனக்கும் தொடர்ந்து தொண்டை வலி இருந்துவருகிறது. உணவகத்தில் இரவு வாங்கிய செட்டிநாடு சிக்கனை அடுத்தநாள் காலையில் சாப்பிட்ட சிறிதுநேரத்தில் சிக்கன் சாப்பிட இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது. “உயிரிழந்த இளைஞரின் தரப்பில் எந்தவித புகார் வரவில்லை என்பதால் இதுவரையும் விசாரணை தொடங்கப்படவில்லை” - என தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!