தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.


அதன்படி கடந்த ஆண்டு முதல் கஞ்சாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2023 ஜனவரி முதல் மே மாத இறுதி வரை கடந்த 5 மாதத்தில் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 469 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், அவற்றில் ஈடுபட்ட 917 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேலும் தென் மண்டலத்தில் 338 கஞ்சா குற்றவாளிகள் மீது நீதிமன்றங்கள் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. இதுபோன்று தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 71 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 13 முக்கிய கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் 44-வீடுகள், 26-பிளாட்கள்/இடங்கள், 5-கடைகள் ஆகிய 14 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதோடு கடந்த ஒரு வருட காலத்தில், தென்மண்டலத்தில் 1316 கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் 2448 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 



மேலும் வேறு மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி விற்பனையில் ஈடுபட்ட 20 முக்கிய குற்றவாளிகள் வேறு மாநிலத்திலிருந்து கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அவ்வழக்குகளை தொடந்து கண்காணித்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதை மற்றும் கஞ்சா விற்பனை சமூக சீர்கேட்டை சமூகத்திலிருந்து முற்றிலுமாக வேரறுக்க அனைத்து பொது மக்களின் மேலான ஒத்துழைப்பு அவசியம்” என சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுள்ளார். மேலும் கஞ்சாவிற்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.


 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.