உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன அதிகாரியும் அவரது மனைவியும் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு வாரிசாக ஒரு மகன் மட்டும் உள்ளார். விமானியாக பணியாற்றும் இவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் கடந்த 2016ம் நடைபெற்றுள்ளது. ஆனால் மகன் கவுகாத்தியிலும், மருமகள் நொய்டாவிலும் வேலை பார்ப்பதால் 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. மகனிடம் இது தொடர்பாக பேசிப் பார்த்த பெற்றோர், இது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தங்களுக்கு ஓராண்டிற்குள் பேரப்பிள்ளை வேண்டும் இல்லையென்றால் நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாயை தன் மகன் தரவேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் அவர்கள் அளித்துள்ள மனுவில், எங்களுக்கு ஒரே மகன் தான் உள்ளார். அதனால் எனது வருமானம் முழுவதையும் அவரை வளர்க்கவே பயன்படுத்தியுள்ளோம். அவரது கல்விக்காக சேமிப்பு முழுவதையும் செலவு செய்திருக்கிறோம். அவரை விமானியாக்க வேண்டும் என்று விரும்பி கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவிற்கு அனுப்பினோம். அதற்காக சுமார் 50 லட்சம் ரூபாய் செலவு செய்தோம். அனால் அங்கு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலமை காரணமாக ஒரே ஆண்டில் இந்தியா திரும்பிவிட்டார். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் வீட்டில் தான் இருந்தார். அப்போதும் அவரை நாங்கள் தான் பார்த்துக்கொண்டோம். பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் விமானி வேலை கிடைத்து விட்டது. எனக்கும் வயதாகிவிட்டது, என் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த 2016ம் ஆண்டு என் மகனுக்குத் திருமணம் செய்துவைத்தோம். எங்கள் ஓய்வு காலத்தில் எங்கள் பேரனுடன் நேரத்தை செலவிடுவோம் என்று ஆசையுடன் இருந்தோம். ஆனால் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருவரும் இதுவரை குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
இருவரும் வேலை காரணமாக இருவேறு இடங்களில் வசிக்கின்றனர். இது எங்களுக்கு தாங்கமுடியாத வலியைக் கொடுக்கிறது. குழந்தையை வளர்க்க கடினமாக இருக்கும் என்று சொன்னால், குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம் என்று கூட சொல்லிவிட்டோம். ஆனால் இருவரும் அதை கேட்கத் தயாராக இல்லை. அதனால், ஒருவருடத்தில் இருவரும் சேர்ந்து எங்களுக்கு ஒரு பேரப்பிள்ளையைப் பெற்றுக்கொடுக்க உத்தரவிடவேண்டும். இல்லையென்றால் இவர் படிப்புக்கு செய்த செலவு, 5 நட்சத்திர விடுதியில் செய்த திருமணத்திற்கு ஆன செலவு, அன்பளிப்பாகக் கொடுத்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றபோது செய்த செலவு ஆகியவற்றையெல்லாம் சேர்த்து 5 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிடவேண்டும்.
ஏனெனில் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தது அனைத்தையும் மகனுக்காகவே செலவு செய்திருக்கிறோம். இப்போது எங்களிடம் எந்த வருமானமும் இல்லை” என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தனர். பெற்றோர்களின் மனுவின் மீது நியாயமான காரணங்கள் இருப்பதால் இந்த மனு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு வரும் நாளில் மகன் மற்றும் மருமகள் இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : உட்கட்சி விவகாரத்தால் திணறும் தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக.. கட்சியினரிடையே சலசலப்பு