தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உலகப்புகழ் வாய்ந்த வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி ஏழு நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டத்தால் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்து இருந்தது.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பொழுதுபோக்கு அம்சங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள், ராட்டினங்கள் போன்றவைகள் அமைக்கப்படும். வழக்கமாக திருவிழாக்காலங்களில் 15 விதமான ராட்டினங்கள் அமைக்கப்படும். ஆனால் 2 வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் இந்த ஆண்டு 28 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அமைக்கப்படும் ராட்டினங்கள் இயங்குவதற்கு மின் விளக்குகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார இணைப்பு கொடுக்கப்படும். இந்த ராட்டின சேவைக்கு இயக்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்து வேலை ஆட்கள் வந்துள்ளனர். அப்படி தேனியை அடுத்துள்ள உப்பார் பட்டியை சேர்ந்த முத்துக்குமார் வயது 36 என்பவர் மின்விளக்கு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
அப்போது ராட்டினத்தில் அருகில் சுமார் எட்டடி உயரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கு எரியாமல் இருப்பதை பார்த்து சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது, அங்கிருந்த இரும்பு ஏணியை தூக்கிக்கொண்டு மின்விளக்கு பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கம்பம் அருகில் சென்றார். இரும்பு கம்பத்தில் ஏறி மின்விளக்கை சரி செய்வதற்காக கையில் எடுத்து சென்ற ஏணியை அந்த கம்பத்தின் மீது சாத்தியுள்ளார். அப்போது அந்த கம்பத்தின் மின்கசிவு இருந்துள்ளது. எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து நிலையில், பின்னர் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பார்வையிட்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் .
மின்சாரம் பாய்ந்து இறந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி சுனிதா 31 வயது, விசாலினி 10 வயது, ஏழு மாத குழந்தை, விஷால் பாண்டி என்ற 7 வயது மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக வீரபாண்டி பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை ராட்டினங்கள் ஏதும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் ராட்டினங்கள் இயக்குவதற்கு இந்து அறநிலையத் துறை சார்பாக ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ஏலம் விடப்பட்டு இருந்ததும் நேற்று, இன்று ,நாளை என்ற மூன்று நாட்கள் மட்டுமே ராட்டினங்கள் இயங்கினால் செலவு செய்த தொகையை எடுக்க முடியும் சூழலில் ராட்டின உரிமையாளர்கள் இருந்துவரும் நிலையில் உயிரிழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததாகவும் தெரிகிறது. இந்த பிரச்சினைகளில் வீரபாண்டி கோவில் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பொழுதுபோக்கு அம்சமான ராட்டினங்கள் இயங்குவது தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்