மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும், இதன்தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மதுரையின் 292 ஆவது ஆதீனம் அருணகிரி நாதரின் மறைவிற்கு பின் 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிக பராமாச்சாரியார் பொறுப்பேற்றார். இந்நிலையில் 293-வது ஆதீனம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “நான் பிறந்தது திருநெல்வேலி. அப்பா அரசு சுகாதார ஆய்வாளர் என்பதால் அடிக்கடி இடமாற்றம் வரும். படித்தது எல்லாம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார். படிக்கும் போதே குன்றக்குடிக்கு அடிக்கடி செல்வேன். ஆதீனத்தை சந்தித்து பேசுவேன். சமயவகுப்பு நடப்பதை அறிந்து 'நான் சேரவா' எனக் கேட்டேன். ஒத்துக்கொண்டார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் மடத்திற்கு இடமாறினேன்.



தீட்சை பெற்ற பிறகு கன்னியாகுமரிக்கு ஆதீனம் மடம் நிர்வாகத்தை கவனிக்க என்னை நியமித்தார்கள். ஆவுடையார் கோயில் கும்பாபிஷேகம் பணியை செய்யும் பொறுப்புதந்தார்கள். காஞ்சிபுரம் திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் 25 ஆண்டுகள் இருந்தேன். மதுரை ஆதீனத்திடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. 2019ல் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். மூத்த தம்பிரானாக இருந்த நான் மூத்த ஆதீனம் அழைப்பின்பேரில் அடிக்கடி குருபூஜைக்கு வந்து செல்வேன். அப்போது எனக்கு சுந்தரமூர்த்தி தம்பிரான் என்று பெயர். இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற பின் 2021 வரை தஞ்சை மாவட்டம் கஞ்சனுார் கோயிலில் நிர்வாக பணிகளை கவனித்து வந்தேன்.



21-வது வயதில் சன்னியாசம் பெற்றேன். வீட்டில் எதிர்ப்பு இருந்தது. என் ஜாதகத்தில் 21 வயதில் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என இருந்தது. அதன்படி நடந்தது. எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அப்போதே என்னை வீட்டில் சாமியார் என்பார்கள். கல்லல் பள்ளியில் 5ம் வகுப்பில் என்னை சேர்க்க தந்தை அழைத்துச் சென்றார். தந்தை குறித்து தலைமை ஆசிரியர் கேட்டபோது எதிரே இருந்த சிவன் கோயிலை தந்தை எனக் காட்டினேன். உடலுக்குதான் இந்த தந்தை. உயிருக்கு சிவன்தான் என்றேன். ஆத்திரமுற்ற என் தந்தை என்னிடம் கடுமையாக நடந்துகொண்டார்”. 

 

அரசியல் ஆர்வம் குறித்து

 

 ”எனக்கு அரசியல் ஆர்வமில்லை. கோயில் விஷயங்கள் தொடர்பாக அரசியல் செய்தால் கருத்து தெரிவிக்க தயங்க மாட்டேன்”.



தமிழ் புத்தாண்டு குறித்து தி.மு.க கருத்திற்கு அவரது பதில் 

 

”ஆதிகாலத்தில் இருந்தே சித்திரை-1ல் தான் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளன. முன்னோர் கடைபிடித்து வருவதை நாம் மாற்றக்கூடாது”.

 

மானாமதுரை கோயில் கும்பாபிஷேக மேடையில் பேசிய பரபரப்பு பேச்சு குறித்து.

 

கோயில், மடம் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் வவ்வால் போல பிறப்பார்கள் என்றேன். அப்படி சொன்னாலாவது பயந்து தருவார்கள் எனக்கருதியே சொன்னேன். அது சாபம் அல்ல. அட்வைஸ். அப்படியும் தரமறுப்பவர்களிடம் பேசி தீர்வு காண்போம். அதுவும் முடியவில்லை என்றால் வழக்குதான். நான் பொறுப்புக்கு வந்தபிறகு நீதி மன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது. வவ்வால்கள் கோயில்களில் இருந்து காலத்தை போக்குகின்றன. இடையூறு என்று அடித்துக் கொல்கிறார்கள். அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்”.

 

ஆதீனம் அவர்கள் பணி?

 

அடிப்படையில் நான் ஒரு பேச்சாளன். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் புத்தகங்கள் அதிகம் படிப்பேன். அதில் உள்ள கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறேன். நான் தம்பிரானாக இருந்த போது மத வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றேன். இன்று ஹிந்துக்கள் மதம் மாறாமல் இருக்க என்னாலான பணிகளை செய்து வருகிறேன்.

 

294-வது ஆதீனம் யார் ?

 

நான் பொறுப்பேற்று 5 மாதங்கள்தான் ஆகியுள்ளது. இளைய ஆதீனம் நியமிக்க அவசரமும், அவசியமும் இப்போது இல்லை. அதற்கான காலம் வரவேண்டும். இறைவன் தகுதியானவரை அனுப்புவார் என நம்பிக்கை உள்ளது.

 

தற்போதைய கால கட்ட இளைஞர்கள் குறித்த பார்வை ?

 

தற்போது இளைஞர்கள் ஆன்மிகம் மற்றும் தேசபக்திகள் அதிகம் இல்லை. அது வருத்தமாக உள்ளது.  கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருக்கிறார்கள். பெரும்பாலும் சினிமா, அரசியலில்தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லா கூட்டங்களிலும் நரைத்த தலைதான் தெரிகிறது. 'கறுத்த' தலையாக மாற்ற வேண்டும். அவர்களை சீர்த்திருத்த வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால திட்டங்களில் ஒன்று”



 

வெளி பயணங்கள் குறித்து

 

எனக்கு கடல் கடந்து செல்ல விருப்பமில்லை. அழைப்புகள் வருகின்றன. சமீபத்தில்கூட காசியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது. ஆனால் இங்கேயே செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கிறதே.

 

தமிழ் வளர்ச்சிப் பணி குறித்து

 

திருஞானசம்பந்தர் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளேன். வைகாசி முதல் தமிழாகரன் என்ற மாதபத்திரிகை வெளியிட உள்ளேன். பொருளாதார ரீதியாக சிரமப்படும் தமிழ் புலவர் களுக்கு ஆதரவளித்து வருகிறேன். கோயில்களில் ஓதுவார் நியமிக்க உள்ளேன். தமிழ் ஆய்வாளர்களை கொண்டு நுால்கள் எழுதி வெளியிட உள்ளோம். மடத்தோடு தொடர்பு உடைய முத்துராமலிங்க தேவர், வ.உ.சி., மருதுபாண்டியர், மங்கையர்க்கரசி, திருஞானசம்பந்தர், பாண்டித்துரை தேவர், கிருபானந்த வாரியார், வள்ளலார் பெயர்களில் விருது வழங்க உள்ளோம் என பேட்டியளித்துள்ளார்.