தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணை கடந்த 1895-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான்பென்னிகுவிக் தனது கடுமையான முயற்சியால் பல்வேறு சோதனைகளுக்கு இடையே இந்த அணையை கட்டி முடித்தார். தற்போது இந்த அணை 5 மாவட்ட மக்களின் குடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் தமிழகம் மற்றும் கேரள அரசுகளிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2011-ம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் சுமார் 40 நாட்கள் கேரளாவை நோக்கி தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.




இதனைத் தொடர்ந்து அணை குறித்த வரலாறும், அதனை கட்டி முடித்த ஜான்பென்னிகுக் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அவரை தேனி மாவட்ட மக்கள் தங்கள் கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். தங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் அவரது படத்தை வைத்து வணங்கி வருகின்றனர். மேலும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் பென்னிகுக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். அவரது பிறந்த நாளான ஜனவரி 15-ந்தேதி தேனி மாவட்டத்திற்கு எப்போதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.




அன்றைய தினம் கம்பம்,பாலார்பட்டி, மற்றும் சுருளிபட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா லோயர்கேம்ப் பகுதியில் பென்னிகுவிக் மணிமண்டபமும், அவரது முழு உருவ வெண்கல சிலையையும் அரசு சார்பில் அமைத்து விழா நடத்தினார்.




அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது. பென்னிகுக் மணிமண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்தது தேனி மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மணிமண்டபத்தை கண்டு செல்கின்றனர். தமிழக சட்டப்பேரவையில் பென்னிகுக் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.




அதன்படி சென்ற ஆட்சியில் அரசு விழாவாக ஒவ்வொரு வருடமும் பென்னிகுவிக் பிறந்த நாளன்று அரசு சார்பில் மரியாதை செலுத்த அரசு விழாவாக நடத்த அறிவிப்பு வெளியாகும்.  நாளை ஜனவரி 15ம் தேதி பென்னிகுவிக்கின் 181 வது பிறந்த நாள் தின விழா கொண்டாடப்படும் நிலையில் தற்போதுள்ள திமுக ஆட்சியில் இதுவரை பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து எந்தவித ஒரு அறிவிப்பும் இல்லை எனவும் தங்களுடைய வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்ற அறிவிப்பு வெளியிட வேண்டுமென விவசாய சங்கத்தினர்கள் சார்பாகவும் தேனி மாவட்ட மக்கள் சார்பாகவும் கோரிக்கை எழுந்துள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண