மேலூர் அருகே தான் பிறந்த ஊரில் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் தொடங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி.

 

சொந்த ஊரில் கோடை கால பயிற்சி

 

 நாம் எந்த உயர் பதவி அடைந்தாளும், எந்த எல்லைக்கு சென்றாலும் நம்முடைய சொந்த ஊரையும், படித்த பள்ளி, கல்லூரிகளை மறக்கக் கூடாது என்று சொல்வார்கள். அதன் நினைவுகள் எப்போதும் நம் நெஞ்சில் ஒட்டி இருப்பதும் இயல்பு. நம்மை வளர்த்த கிராமம், பள்ளி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிறந்த ஊரில் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் தொடங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாணிக்கம்

 


மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கேரளா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி நிஷாந்தி இவரும் கேரளா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜமாணிக்கம் தான் பிறந்த ஊரான திருவாதவூரில் இளைஞர்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், தான் படித்த அரசு பள்ளிக்கும் பல இலட்சம் மதிப்பிலான புத்தகம், கணினி மற்றும் கல்வி பயில்வதற்கான பல்வேறு உதவிகள் செய்து வருகின்றார். மேலும், திருவாதவூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம், வளரி. கிராமிய இசை, நடனம், தையல், ஓவியம் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சி. கணினி வகுப்பு மற்றும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு கோடை கால பயிற்சிகளை தொடங்கி நடத்தி வருகின்றார்.

 

பயிற்சி தான் முன்னேற்றம்


 

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கோடைகால பயிற்சி வகுப்புகளை திருவாதவூரில் உள்ள அறிவகம் கல்வி மையத்தில் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள். பயிற்சி வல்லுனர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகளிடம் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜமாணிக்கம்...,” சிறுவயது முதல் நாம் கற்று வரும் கல்வியும், அதற்கான பயிற்சி மட்டுமே நமக்கான முன்னேற்றம். வாழ்க்கையில் உயர்ந்த துறைக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அதற்கான பயிற்சியினை நாம் ஆர்வமுடன் கற்க வேண்டும்” என பேசினார்.

 

கோடைகால பயிற்சி பயன்

 

மேலும் தலைமை ஆசிரியர் தென்னவன் நம்மிடம் கூறுகையில்...,” அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது பல்வேறு இடங்களில் சாதனை செய்து வருகின்றனர். இது போன்ற கோடைகால பயிற்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே மாணவர்கள் இது போன்ற நல்ல பயிற்சிகளை பயன்படுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.