செல்போன் பயன்பாடு அனைவரிடம் அதிமடைந்துள்ளது. செல்போன் மூலம் இணையத்தை பயன்படுத்தி பலரும் பயனடைகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை எளிமையாக பயன்படுத்துகின்றனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் முதல் முதுகலைப் பட்டப்படிப்புவரை ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்றது. இப்படியான சூழல் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் செல்போன் மூலம் தவறான பாதைக்குச் செல்லும் வழிகளும் இருக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் வகுப்பறையில் செல்போனில் விளையாடிய மாணவனை ஆசிரியர் கண்டித்ததால், பதிலுக்கு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவன் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் படித்த மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய முதலாம் ஆண்டு மாணவர் மெக்கானிக்கல் துறையில் படித்து வருகிறார். இந்த மாணவர் வகுப்பறையில் அதிகளவு செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஓவிய வகுப்பு நடைபெறும் போது வகுப்பை கவனிக்காமல் அந்த மாணவர் செல்போனை பயன்படுத்தி விளையாண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த் செல்போன் விளையாடிய மாணவனை கண்டித்துள்ளார். இதை கண்டுகொள்ளாத மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளார். அப்போது மாணவனின் பெற்றோரிடம் புகார் தெரிவித்த முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை கண்டித்து மீண்டும் வகுப்பு வரச் சொல்லியுள்ளனர். அதன்பின் தொழிற்பயிற்சி நிலையத்தில் எப்போதும் போல மாணவன் வகுப்பிற்கு வந்துள்ள. ஓவிய ஆசிரியரிடம் மாணவன் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ’எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் பேசிக் கொள்ளவும்’ - என ஆசிரியர் ராஜா ஆனந்த் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினார்.
இதனால் ரத்தத்துடன் ஆசிரியர் ஓடியுள்ளார். படுகாயம் அடைந்த ஆசிரியர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சோமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Recruitment | நேர்காணல் மட்டுமே..மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளர் பணி.. உடனே விண்ணப்பிக்கவும்!