மதுரை வண்டியூர் சுற்றுச்சாலை அருகே எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். முன்னதாக மாநாட்டு மேடைக்கு திறந்த வெளி வாகனத்தில் வந்த எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் நெல்லை முபாரக்கிற்கு மலர்கள் தூவி வரவேற்கப்பட்டது.

 

மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசுகையில் "SDPI கட்சியின் மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும் போது அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது.



 

திமுக கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். நான் முதலமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. அதிமுகவில் நான் கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர் பதவிக்கு வந்துள்ளேன்.  என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பென்றால் என்னவென்று தெரியாது. நான் கடுமையாக உழைத்து கட்சிக்கு கிளைச் செயலாளரிலிருந்து பொது செயலாளராகவும், ஆட்சிக்கு முதலமைச்சராகவும் வந்தேன், ஆனால் மு.க.ஸ்டாலின் கருணாநிதியால் முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் வந்துள்ளார். நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.



மதுரை ராசியான மண். மதுரையில் தொட்டது துலங்கும் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநாடும் வெற்றி பெறும், அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது, 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடைக்கப்பட்டது, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அக்கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்தால் அக்கட்சி பின்னுக்கு தள்ளப்படும், 12 ஆண்டுகள் கூட்டணி வைத்த திமுக மக்கள் பிரச்சினைகளை பேச முடிந்ததா?, திமுக எங்களைப் பார்த்து அடிமை என கூறுகிறது. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை நாங்களும் யாரையும் அடிமைப்படுத்தப்படவில்லை. அதிமுக சுதந்திரமான கட்சி சாதாரண தொண்டன் கூட உயரிய பதவிக்கு வர முடியும், மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டுமென திமுக ஒரு கூட்டணி அமைத்துள்ளது.

 



திமுக மக்களை பற்றி கவலைப்படவில்லை, குடும்பத்தினருக்காக திமுக கூட்டணி வைத்துள்ளது, கடந்த காலங்களில் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது, தொழில் முதலீட்டு மாநாடுகள் வாயிலாக எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், திமுக கொள்ளை அடிப்பதற்காக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது. 1996 ல் இருந்து திமுக மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு, அதிமுக ஒரு நாளும் கொள்கைகளை விட்டு கொடுக்காது. நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பாஜகவுடன் கூட்டணி வைத்தோம், அதிமுக பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவையும், பாஜகவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார். நாலரை ஆண்டு காலம் ஆட்சியில் நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல, அதிமுகவுக்கு எதிராக வாக்கு அளித்த போதும் அதிமுக ஆட்சி நிலைத்து நின்றது, எதிராக வாக்களித்தவரையும் சமாளித்து தான் அதிமுக ஆட்சி நாலரை ஆண்டுகள் நடைபெற்றது, எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் SDPI கட்சியோடு அதிமுகவுடன் நிறைய கட்சிகள் வர உள்ளன, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும், சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என பேசினார்