தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தனிநபர் கடன் திட்டத்தில், 6% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கைவினை கலைஞர்கள் கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தில், 7% வட்டி விகிதத்தில் ரு.1,00,000/- வரை கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.1,50,000/- வரை கடன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலைதொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில்பவர்களுக்கு 3% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-(ஆண்டிற்கு 4 இலட்சம்) வரை, வெளிநாடுகளில் தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் பயில்பவர்களுக்கு ரூ.30,00,000/-(ஆண்டிற்கு 6 இலட்சம்) வரை, கடனுதவி பெற ஆண்டு வருமானம் நகர்ப்புறத்திற்கு ரூ.1,20,000/- கிராமப்புறத்திற்கு ரூ.98,000/- மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5%, வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/-(ஆண்டிற்கு 4 இலட்சம்) வரை, வெளிநாடுகளில் பயில்பவர்களுக்கு ரூ.30,00,000/-(ஆண்டிற்கு 6 இலட்சம்) வரை, கடனுதவி பெற ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேற்படி, கடன் திட்டங்களில் தேனி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பயன் பெறுவதற்கு, லோன் மேளாக்கள் கீழ்த்தெரிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் 20.06.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
1. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அல்லிநகரம் கிளை, தேனி.
2. ஏ145, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, பெரியகுளம்.
3. டிடி109, ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆண்டிபட்டி.
4. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, போடிநாயக்கனூர் கிளை, தேனி.
5.எம்.டி.தனி 97 இராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உத்தமபாளையம்.
6.எம்பி 101 சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், சின்னமனூர்.
7.ஏ425 காமயகவுண்டன் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கம்பம்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை, கடன் தொகை ரூ.25,000/- கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஒரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும்.
கடன் தொகை ரூ.50,000/- கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள இரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும். கடன் தொகை ரூ.1,00,000/- மேல் கோரும் பட்சத்தில், கோரப்படும் தொகைக்கு இரு மடங்கு சொத்து அடமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafied Certficate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வங்கி கோரும் ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.