*உண்டு, உறைவட விடுதி சமையலர் தேர்வுக்குழுவின் மீது தமிழகத்தின் முதன்மை செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பரிந்துரைக்கிறது- நீதிபதி*

 

*இது தேர்வு குழுவின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், இரக்கமற்ற செயல் என்றும் நீதிமன்றம் கருதுகிறது.-மதுரைக்கிளை*

 

*தேர்வுக்குழு தலைவர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்த உத்தரவுக்கு தடை*- நீதிபதி

 

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் சமையலர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில் பணி நியமன ஆணையை வழங்கக்கோரி வசந்த் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

 

அரசு தரப்பில், "மொத்தம் 954 பணியிடங்களுக்கு 3 கட்டங்களாக பணியாளர்கள் தேவ்ரு செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியில் சேர்ந்தவர்களில் பலருக்கு அனுபவ அறிவு குறைவாக உள்ளது என்றும், அவர்கள் சமைக்கும் உணவு சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதோடு விடுதியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றுவோர் தங்களுக்கு சமையலர் பணியை வழங்கவும், அதுவரை சமையலர் பணிக்கு நபர்களை தேர்வு செய்ய தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டது. அதன் பின்னரும் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இவற்றைக் கருத்தில்கொண்டு தேர்வுக் குழுவின் தலைவர் சமையலர் பணிக்கான தேர்வு அறிவிப்பை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்" என தெரிவிக்கப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து நீதிபதி 2021 நவம்பர் மாதம் பணியில் நியமனம் செய்யப்பட்டவர்களின் அனுபவ அறிவை பரிசோதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக  தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அனுபவ அறிவு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு விரைவாக எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. 

 

ஆகவே தேர்வுக்குழு தலைவர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது மனுதாரர்களுக்கும், அரசுக்கும் தேவையற்ற செலவையும், சிரமத்தை ஏற்படுத்தும். குழுவின் பணி உரிய நபர்களை தேர்வு செய்வதே. இது தேர்வு குழுவின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், இரக்கமற்ற செயல் என்றும் நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே தமிழகத்தின் முதன்மை செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயலர்கள், உண்டு உறைவிட விடுதி சமையலர் தேர்வுக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.