சிவகங்கை காரைக்குடி அடுத்த, பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்  72 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்து பக்கத்து கிராமங்களுக்கு  சென்று பெற்றோர்களிடம் குழந்தைகளை  அரசு பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தனர். இந்த  சீரிய முயற்சியின் வெற்றியாக  தற்போது புதிதாக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.






இதையடுத்து அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு  பாடத்தான்பட்டி கிராமமக்கள் சார்பில் விழா நடத்தி  புதிதாக  சேர்ந்த  மாணவர்களை  கவுரவித்தல் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் புதிதாக  பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊக்கப்படுத்தினார்.



மேலும்  பெற்றோருக்கும் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அப்பள்ளிக்கு நாகவயல், வாரிவயல், பொய்யலூர் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பள்ளி வந்து செல்லும் 6-ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில்  கல்வி சீர்வரிசையாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அவற்றை மாணவர்களுக்கு அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து விழா நடைபெற்ற இடத்திலிருந்து  நாதஸ்வர, மேளதாளம் என மங்கல வாத்தியங்கள் முழங்க புதிதாக சேர்ந்த  மாணவர்கள் மற்றும்  பெற்றோரையும் கிராமமக்கள் ஆசிரியர்கள்  பள்ளிக்கு ஊர்வலமாக  அழைத்துச் சென்று ஆர்த்தி எடுத்து வரவேற்றனர்.



கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அரசு உதவியை எதிர்பாராமல்  கிராம மக்கள்  போட்டி போட்டு உதவிகள் செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை அதிகாரிக்கும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.