பாளையங்கோட்டை சிறை கைதி முத்து மனோ இறப்புக்கு பழிக்கு பழியாக கொல்லப்பட்ட காண்டிராக்டர் கண்ணன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் நெல்லை கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம்  தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலைப் பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி அடக்கம் செய்தார்கள். இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாளையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது. 


இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:- எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கண்ணன் கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும், அதுவரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண