அதிமுக ஆட்சியின் போது மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதிகள் கடுமையான சாடலை முன்வைத்துள்ளனர். 


நீதிபதிகள் தெரிவித்தது என்ன..? 


விண்ணப்பங்கள் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஆவணங்களை திருத்தியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால் முறைகேடான நியமனங்களை ரத்து செய்து, அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ஆவின் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 


என்ன நடந்தது..? 


ஆவின் நிறுவனம் மதுரை, விருதுநகர், திருச்சியில்  கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மதுரை, விருதுநகர், ஆவின் பணியாளர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்தது.


இதையடுத்து தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து பணி நீக்க உத்தரவில் தலையிட மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தார். 


தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என  ஆவின் பணியாளர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு: 


மதுரை ஆவினில் 47 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பணிக்காக விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 33 பேரின் விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பப்படவில்லை. விண்ணப்பங்கள் பெறப்பட்டது, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 


விண்ணப்பங்கள் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
மதுரை ஆவனில் தேர்வு முறைகேடு மட்டுமில்லாமல் குற்ற சதி, ஆவணங்களை திருத்தியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால் முறைகேடான நியமனங்களை ரத்து செய்து, அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


அந்த அலுவலர்களை சுதந்திரமாக நடமாடவிட்டால் இதுபோன்ற முறைகேடுகளை அவர்கள் தொடர்வர். மதுரை ஆவின் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்க வேண்டும். போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். 


மேலும் விருது நகர் ஆவின் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். விண்ணப்பங்களை சரிபார்த்தல், மதிப்பெண் சரிபார்த்தல் மற்றும் முறைகேடு குறித்து புதிதாக விசாரிக்கலாம். குற்றவியல் புகாரும் அளிக்கலாம். பணி நியமனம் பெற்றவர்களின் தகுதி, சான்றிதழ், முன்நடத்தை குறித்து ஆய்வு நடத்தலாம். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை தொடரலாம்.


திருச்சி ஆவினில் ஓஎம்ஆர் சீட் எங்கிருக்கிறது என்பது இப்போது வரை மர்மமாக உள்ளது. தேர்வு மற்றும் ஓஎம்ஆர் சீட் முறைகேடு குறித்து ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்க வேண்டும். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.