தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசிய உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மற்றும் மாணவர்களை போராட தூண்டிய காரணத்திற்காக  வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் தாவரவியல் ஆசிரியர் வெற்றி உட்பட மூன்று பேரை முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.




தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 343 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் குமார் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் உள்ளனர் . இந்த நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் என்பவர் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் மாணவிகளிடம் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தங்களது பெற்றோர்களுடன் கடந்த 13 ஆம் தேதி  பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை அழைத்து அவரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு வர வேண்டுமென வலியுறுத்தி ஆண்டிப்பட்டி  ரெங்கசமுத்திரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் இங்கு வந்த உடற்கல்வி ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு தாக்கும் தொணியில் பேசினர். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து கொட்டிய மழையிலும் நனைந்து கொண்டு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் உள்ளிட்டோரை அழைத்து அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு தேனி புறப்பட்டு சென்றார்.




இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மூன்று  ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவ, மாணவிகளின் புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதற்காகவும் வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் தாவரவியல் ஆசிரியர் வெற்றி ஆகியோர் மாணவ மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டியதற்காகவும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தேனி மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி  உத்தரவு பிறப்பித்தார். மூன்று அரசு ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.