நாட்டின் 75வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவார். அதேபோல மாநில அளவில் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதன் முறையாக சென்னை கோட்டையில் கொடியேற்ற உள்ளார். மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும். இதனிடையே,சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறப்பு விருந்தினர்களாக யாரை அழைக்கலாம் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.


கொரோனா பரவல் காலம் என்பதால் விழாவை கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய உள்துறையில் இருந்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கொரோனா பரவல் நீடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தினவிழா நடப்பதால் நோய் தொற்று மேலும் பரவிவிடும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது. எனவே சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலைதளம் மூலமாக காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, indianidc2021.mod.gov.in என்ற இணைய தளத்தை பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை இக்கொண்டாட்டத்தில் இணைக்கும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகள் வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் உரிய அடையாள சான்று வைத்திருக்கின்றனரா என்று சோதிக்கும்படியும் டெல்லி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதே போல அனைத்து மாநில தலைநகரங்களிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவைகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.


குறிப்பாக, சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில்  தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக வெளியான தகவலையடுத்து பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் உலக அளவிலான சுற்றுலா தளம் என்பதால் வெளி மாவட்டத்தில் இருந்தும் வட மாநிலத்தில் இருந்தும்  அதிகமான சுற்றுலா பயணிகள் ரயிலில் ராமேஸ்வரம் வருகின்றனர். ஆனால் தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால் பாம்பன் பாலம் வழியாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கபட்டு வருகிறது.


எனவே, மண்டபம் ரயில் நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து ரயில் பயணிகளின் உடைமைகளை வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு ஆயுதம் ஏந்திய ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், பயணிகளிடம் வெடி பொருள்கள் ரயிலில் எடுத்து செல்ல வேண்டாம் எனவும்  அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கமாண்டோ படையினர், மத்திய இருப்பு பாதை போலீஸார்,மற்றும் பட்டாலியன் படை போலீஸார் பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.