சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், தந்தை மகனை தொடர்ச்சியாக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் அளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 


இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது  மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும்  நேரில் ஆஜராகினர். 


வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தின் போது பணியில் இருந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் சேர்ந்து தொடர்ச்சியாக தாக்கி உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தியதாகவும் ,  காவலர்கள் தந்தை ஜெயராஜை அடித்தபோது அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர்  இருக்கிறது என்று சொல்லி இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், மகன் பென்னிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அப்போது காவலர்கள் அடிப்பதை நிறுத்தியதை பார்த்த ஆய்வாளர் ஸ்ரீதர்  தொடர்ந்து  காவலர்களைத் மீண்டும் அடிக்க சொன்னதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும்  23 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.


 




 


நீட் தேர்வு விடைத்தாளில் (OMR) குளறுபடி நடந்துள்ளது உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரி மாணவன் வழக்கு


மாணவனின் OMR சீட் மற்றும் அதன் கார்பன் காப்பி தாக்கல் செய்ய நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த நிலையில்  நீட் தேர்வு முகமை மாணவனின் ஓஎம்ஆர் சீட் மட்டுமே தாக்கல் செய்தது.


திருநெல்வேலியைச் சார்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"நான் 12 ஆம் வகுப்பு முடித்து  கடந்த ஜூலை 17லில் நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு நீட் தேர்வில் பங்கு பெற்றேன் தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன்.


இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை (answer key) வெளியிட்டது. அதில், எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தது.இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதில் எழுதிய OMR விடைத்தாள்  பக்கங்களை பதிவேற்றம் செய்துள்ளது. அதை பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சியானது. 


அந்த OMR பதில் தாள் என்னுடையது அல்லஅதில், எனக்கு 115 மதிப்பெண்கள் மட்டுமே வரும் அந்த OMR விடை தாள் நான் எழுதியது இல்லை. எனது விடைத்தாள் திருடப்பட்டு உள்ளது. இதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது.எனவே, எனது அசல் OMR விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் எனது விடைத்தாள் மோசடி  குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் மருத்துவ கலந்தாய்வில் எனக்கான ஒரு இடம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்த வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீட் தேர்வு முகமை தரப்பில், மாணவன் எழுதிய நுழைவுத் தேர்வின் OMR சீட் நீதிபதி முன் தாக்கல் செய்தார்.ஆனால், நீதிபதி பிறபித்த உத்தரவில் OMR ஷீட் மற்றும் அதன் கார்பன் காப்பியும் இணைத்து தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.ஆனால் இன்று OMR சீட்டின் கார்பன் காபி தாக்கல் செய்யப்படவில்லை.


இதனை பார்த்த நீதிபதி, OMR சீட்டின் கார்பன் காபி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி மனுதாரரின் கோரிக்கையே இதில் முறைகேடு நடந்துள்ளது, என்பதுதான் எனவே OMR சீட்டின் கார்பன் காபி வரும் வெள்ளி கிழமை  அவசியம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.