மீனவன்னா மீன் புடிக்க மட்டுந்தானா' 'எங்களுக்கும் யூடியூப் சேனல் நடத்த தெரியும்ல'
கேமரா ஆங்கிள், பாடி லாங்க்வேஜ், வீடியோ எடிட்டிங் என எந்த காட்சி ஊடகத் தொழில் நிபுணத்துவமும் அறியாதவர். எளிய மீனவ குடும்பத்தில் பிறந்த அவர் ஆரம்பத்தில் கடலில் மீன் பிடிப்பதையும், நடுக்கடலில் குதித்து சக மீனவர்களை காப்பாற்றுவது, நள்ளிரவில் பெருங்காற்றில் மீனவர்கள் தத்தளிப்பது, மீன்களை வெகு லாவகமாக டன் கணக்கில் அள்ளுவது உள்ளிட்ட காட்சிகளை வீடியோவாக்கி பதிவிட்டு வந்துள்ளார்.
ராமநாதபுரம் மீனவர்கள் என்றாலே இலங்கை கடற்படையினர் தாக்குவது தான் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால், இந்த மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்று உங்கள் மீனவன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் முற்றிலும் வித்தியாசமான இந்த மீனவரை பற்றி பார்க்கலாம்.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ளது மூக்கையூர் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் தான் மீனவர் கிங்ஸ்டன். ஆறாம் வகுப்பு வரை படித்த கிங்ஸ்டன், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் சிறு வயதில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார். சிறு வயதில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் கிங்ஸ்டன் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பிரச்னைகள், சவால்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து இருக்கிறார். மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். கடலில் ஏற்படும் இன்னல்கள் அனைத்தும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதனை வெளி உலகிற்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் முதன் முதலில் டிக்டாக் மூலம் மீனவர்கள் படும் துயரங்கள், சவால்கள் மற்றும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் குறித்து கிங்ஸ்டன் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். கிங்ஸ்டன் செய்த டிக்டாக்கிற்கு உள்ளூர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இதனை உலக மக்கள் அறிய செய்ய வேண்டும் என முடிவு செய்து 'உங்கள் மீனவன்' என்கின்ற யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் மீனவர்களின் வாழ்க்கை, கடல் பயணம், மீன்பிடித் தொழில், கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய அனுபவ தகவல்களை காணொளிகளாகப் பதிவு செய்து வெளியிட தொடங்கியுள்ளார்.
நடுக் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்பிடிப்பது, சங்கு பிடிப்பது, அரிய வகை மீன்களை காண்பது என பல்வேறு வகையான வீடியோக்களை யூட்யூபில் கண்டவர்கள் சப்ஸ்கிரைபவர்களாகி அதிகம் அவருக்கு குவிய தொடங்கினர்.தற்போது கிட்டத்தட்ட 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை எட்டியுள்ளார். சில நேரங்களில் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கன மழை, இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மீனவர்கள் எப்படி படகுகளில் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதனை வீடியோவாக பதிவு செய்கிறார். அப்படி கிங்ஸ்டன் எடுக்கும் வீடியோக்களை கோர்வையாக எடிட் செய்து படகு மீன்பிடி துறைமுகம் வந்து சேரும் முன் வீடியோவாக தயார் செய்கிறார். கடலில் எடுக்கும் வீடியோ என்பதால் கடல் காற்று சத்தம் அதிகமாக இருக்கும் எனவே அதனை நீக்கி விட்டு கரைக்கு வந்து அந்த வீடியோக்கான விளக்க ஆடியோவை சேர்த்து அதனை முழு வீடியோவாக தயார் செய்கிறார். மீன்களின் பெயர், தரம், சுவை, விலை இப்படி வெளி உலகம் அறியாத பல மீன் உலக விஷயங்களை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். அப்படியே மெதுமெதுவாய் தான் பிடித்த தரமான மீன்களை எப்படி ருசியாய் சமைத்து சாப்பிடுவது என்பதையும் மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் எச்சில் ஊற வைத்தார். கடற்கரையில் ஐஸ் பெட்டியில் மீன்களை அடுக்குவது முதல் கடையில் ரத்தம் சொட்ட சொட்ட மீன்களை வெட்டி அழகாய் பீஸ் போடும்வரை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தினார்.
தற்போது அவருக்கு யூடியூப் மூலம் பெரிய அளவில் வருமானமும் கிடைக்க தொடங்கியது. இந்த வருமானத்தைக் கொண்டு மாவட்ட தலை நகரங்களில் எல்லாம் மீன் கடை திறந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது மீனவர்கள் மட்டுமல்ல சமூக ஊடகங்களில் இந்த உலகமே அவரை உற்று நோக்குகிறது.