மதுரை காமராசர் பல்கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக இன்று (மார்ச்.17) சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது.  ஐநா மன்றம் 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதை முன்னிட்டு இந்த உணவுத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. 


இவ்விழாவினை கல்லூரியின் முதல்வர் புவனேஷ்வரன் தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகர நல இயக்குநர் வினோத் குமார் கலந்துகொண்டு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். இந்த உணவுத்திருவிழாவில் தமிழ்த்துறை மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட ஸ்டால்களை அமைத்திருந்தனர். 


வரகு பொங்கல், கம்பு உருண்டை, எள்ளு கொழுக்கட்டை, தினைப்பனியாரம், முள்ளு முருங்கை ரொட்டி, நுங்கு பாயசம் உள்ளிட்ட பல பதார்த்தங்கள் ஸ்டால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுவரை சுவைக்காத பதார்த்தங்களை மாணவர்கள் சிலர் சுவைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


இந்நிகழ்வு குறித்து பேசிய கல்லூரி முதல்வர் புவனேஷ்வரன் ஐநா அறிவித்துள்ள சிறுதானிய ஆண்டையொட்டி மாணவர்கள் மத்தியில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இந்நிகழ்வு மூலம் மாணவர்கள் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டனர் என்றும் தெரிவித்தார். 


மேலும், மாணவர்கள் தங்களது பராம்பரியங்கள் குறித்து தெரிந்துகொள்ள இந்நிகழ்வு உதவும் எனவும் தெரிவித்தார்.


மதுரை மாநகர நல அலுவலர் மருத்துவர் எஸ்.வினோத்குமார் பேசுகையில், "சிறுதானியப் பயிர்கள் நீர்த்தேவையில்லாமல் விளையக்கூடியவை. அவை  உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை. அறிவியல் ஆராய்ச்சி பின்புலம் இல்லாத தமிழ்த்துறை மாணவர்கள் சிறப்பாக சிறுதானிய உணவுகளை தயாரித்து வைத்ததும், அது குறித்து அவர்கள் கொடுத்த தகவலும் வியப்பிற்குரியது" எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வினை தமிழ்த்துறை தலைவர் முனைவர் அ.சாந்தி உள்ளிட்ட பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.