ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழா மற்றும் 115-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார்.

 

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்து பேசுகையில், "கோவை குண்டுவெடிப்பு சம்பவம் போல உலகத்தில் பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. நுண்ணிய அறிவும் கண்டுபிடிப்பும் கொண்டிருக்கக் கூடிய மேல் நாடுகளில் அது போன்ற சம்பவகள் நடைபெற்றது என்றால் அங்கே எல்லாம் உளவுத்துறை கெட்டுப் போய்விட்டது, உளவுத்துறை கடமை தவறி விட்டது என்று சொல்ல முடியுமா?



 

கோவை சம்பவத்தில் மின்னல் வேகத்தில் முதல்வர், டிஜிபி சைலேந்திரபாபு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, அடையாளம் தெரியாமல் கருகிப் போய் இருந்த உடலை வைத்து இவர் தான் சம்பந்தப்பட்ட நபர் என்று கண்டுபிடித்து, ஆதாரங்களை தேடி எடுத்து என்.ஐ.ஏ.க்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய கடமையை சிறப்பாக செய்திருக்கிறது.

 

கோவையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் என்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் மிகச்சிறப்பாக செய்துள்ளார். அதன் காரணமாக பல விஷயங்கள் வெளியே வந்துள்ளன. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை மாநில அரசு மிகத்திறமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக வீணாக அவதூறாக சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டியவை." என்றார்.



 

ஆளுநரின் சனாதன தர்மம் குறித்த கேள்விக்கு, "ஆளுநர் மாதிரி ஒரு உளறல் வாதியை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. ஆளுநர் உளறிக்கிட்டே இருக்கிறார். சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடைய இலக்கியம் என்கிறார், சனாதனம் என திருக்குறளை சொல்கிறார். ஆளுநர் முழுக்க முழுக்க ஒரு சனாதன வாதியாக மாறி இந்துத்துவா பிரச்சாரகராக மாறிவிட்டார். அவரை இங்கே கொண்டு வந்து போட்டு வைத்திருக்கிறார்கள். அவருடைய உளறலுக்கு கணக்கே இல்லை" என பேசினார்.



 

திமுக ஆட்சியில் உள்ளதால் எதிர்க்கட்சிகள் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசவில்லையா என்ற விமர்சனம் குறித்து, 24 மணி நேரத்தில் கடமையைசெய்து குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. வயது மூப்பு காரணமாக ஆளுநரை உளறல்வாதி என்பதற்கு பதிலாக ஊழல்வாதி என்றார். வைகோ முதலில் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்ததால், சசிகலா செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.