மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அரசுப் பள்ளிக்கூடம் சுப்ரமணியசாமி கோவில், அரசு மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

 





இதனால் பேருந்து நிலையம் அருகே அதிக அளவு மக்கள் மற்றும் பெண்கள் வந்து செல்வதாகவும் அரசுப் பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக இங்கு நான்கு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களை மதுக்கடையில் இருந்து வரும் மது பிரியர்கள் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.



 

இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த வழியாக சென்ற ஆறாம் வகுப்பு மாணவியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் கையைப் பிடித்து இழுத்து பிரச்னையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த நான்கு டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்தல் அல்லது அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி பெண்கள் பெற்றோர்களுடன் மது கடையை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு பாலம் அமைத்திட கோரியும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.