திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவிலின் பெயரில் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மிகவும் பிரசித்தி பெற்றது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அறுபதாம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறும்.  இதற்காக கோவிலை அணுகும், பலர் தவறுதலாக தனியார் இணையதளத்தினை தொடர்பு கொள்கின்றனர்.  கோவில் நிர்வாகம் தரப்பில் 2000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், தனியார் இணையதளங்கள்  நான்கு லட்சம் ரூபாய் வரை பக்தர்களிடமிருந்து வசூலித்து வருகின்றன. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ல் அமிர்தகடேஸ்வரர் கோவிலின் பெயரில் உள்ள தனியார் இணையதளங்களை முடக்க  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளத்தை நடத்தக் கூடாது. கோவில் இணை ஆணையர் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவும் வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் உணர்வை வியாபாரமாக அணுக கூடாது. கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளத்தை நடத்துவது தவறு. ஆகவே அவை உடனடியாக முடக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தொடர்பாக திருவானைக்காவல் இணைஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.











மற்றொரு வழக்கு




மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " மதுரை மாவட்டம் ஆரப்பாளையம்  ஞானவொளிபுரம் பகுதி, சர்வே எண் 967 மற்றும் 968 ஆகிய பகுதிகளில் உள்ள 4800 சதுர அடி நிலம், 1950 ஆம் ஆண்டே விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில், அங்கிருக்கும் பொது மக்களுக்கான விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  கடந்த 72 ஆண்டுகளாக அந்த பகுதியில் விளையாட்டு மைதானத்தினை அமைத்து பராமரித்து வரும் நிலையில், அப்பகுதியில் மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றாமல், அந்த இடத்தில் தற்பொழுது கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதனை தடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை ஞானவொளிபுரத்தில் விளையாட்டு மைதானத்திற்காகவென 72 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது எனவும், மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு, 72 ஆண்டுகளாக அந்தப் பகுதி விளையாட்டு மைதானமாக பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடும் நிலையில், அதில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சனை இது முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும், அதுவரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தியும் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.