தற்கொலையில் காவல்துறையினருக்கு தொடர்பு உள்ளதாக கூறி மனைவி தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த சகுந்தலாதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 


என்  கணவர் நாச்சியப்பன். மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் இருந்து விடுவிக்க என் கணவரிடம் போளீசார் ரூ.50 வட்சம் பெற்றுள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு எதிராக போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி


வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட பல்வே பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த என் கணவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரனூர் போவீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, என் கணவருக்கு எதிரான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பாலியல் வழக்கு மற்றும் தற்கொலை வழக்கில் போலீசாருக்கு பங்கு உள்ளது. என் கணவரிடம் ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். போலீசாரால் தான் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து கல்லல் போலீசில் புகார் அளித்துள்ளேன். எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. போலீசார் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை என்பதால், என் கணவர் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்..


இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி  பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, இந்த வழக்கில்,  டிஐஜியை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. அவர், கீரனூர் போலீசில் உள்ள தற்கொலை வழக்கை மதுரை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இதேபோல், மனுதாரர் கல்லல் போலீசில் அளித்த புகாரையும் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். சிபிசிஐடி டிஎஸ்பி போக்சோ வழக்கு, தற்கொலை வழக்கு மற்றும் மனுதாரர் புகார் ஆகியவற்றின் மீது 3 மாதத்தில் விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.




மற்றொரு வழக்கு


கொலை வழக்குகளை  விசாரிப்பதற்கென காவல்துறையில் புதிதாக  தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.


திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ் குமார், சங்கர்  ஆகியோர் கொலை வழக்கில் கடந்த 2017 நவம்பர் 6 அன்று   திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு  நீதிபதி வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல் முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, "கடுமையான கொலை குற்றங்கள் குறித்து, போலீசார் நடத்தும்  விசாரணை தொடர்பாக இந்த நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது. கொலை குற்றங்களை சட்டம் ஒழங்கு காவல்துறையினரே விசாரிப்பதால், அதிக வேலை பளு காரணமாக  விசாரணையை தொய்வின்றி,  தீவிரமாக நடத்த அவர்களால் இயலவில்லை.


எனவே, கொலைக் குற்றங்களை  விசாரிப்பதற்கு காவல் துறையில் புதிதாக  தனி பிரிவை உருவாக்க வேண்டும். அரசு இதனை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள நீதிமன்றம் வலியுறுத்துகிறது. முதல் கட்டமாக கொலை வழக்குகளின் விசாரணையை மட்டுமே கையாளும் வகையில் காவல் துறையில், தனிப்பிரிவை உருவாக்குவது அரசின் கடமை என கருத்து தெரிவித்து, இது குறித்து தமிழக காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.