'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது. இந்த கோயில் சிறப்பு குறித்து காணலாம். சிவகங்கைச்  சீமை என போற்றப்படும் சிவகங்கை மாவட்டம் பொதுவாக வறட்சி நிறைந்த மாவட்டமாக பார்க்கப்படுகிறது.



ஆனால் சிவகங்கை பகுதியில் மக்கள் வீரம், பாசம், நேசம், தமிழ் ஆர்வம், பக்தி என பன்முகத் தன்மையோடு இருந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் அதிகளவு உள்ளன. அதில் ஒன்றுதான் கோவனூரில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.



 

வேலுண்டு வினையில்லை என்பார்கள். அப்படி சிவகங்கை மாவட்டம் புனித ஸ்தலமான திருப்புவனத்திற்கு பூவனநாதரை தரிசிக்க அகஸ்திய முனிவர் வந்துள்ளார். பின் அங்கிருந்து கானப்பேர் காளீசரை தரிசிக்கும் எண்ணத்தோடு சென்று கொண்டிருந்தார். நேரம் ஆக, ஆக வானம் இருட்டு அடைந்துவிட்டது. இதனால் ஒரு இடத்தில் அமர்ந்து ஊற்று உருவாக்கி பூஜை செய்துள்ளார் அகஸ்தியர். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி பூஜை செய்துள்ளார். அப்போது கமண்டலத்தில் இருந்த நீர் ஒரு செடியில் பட்டு பூநீராக பெருகியுள்ளது. இதனால் இங்கு கிடைக்கும் பூநீர் சித்த மருத்துவத்திற்கு பிற்காலத்தில் மருந்தாகியுள்ளது. அகஸ்தியர் இந்த இடத்தில் முருகப்பெருமானை நினைத்து பிரதிஸ்டை செய்துள்ளார். பின்னர் பாண்டிய மன்னர்கள் மூலவரை பிரதிஸ்டை செய்து கோயிலாக உருவாக்கியுள்ளனர். இப்படி தான் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.



இந்த கோயிலில் நாகதோசம் உள்ளவர்கள் வழிபாடு செய்தால் தடைகள் நீங்குமாம். அதே போல் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சித்த மருந்து எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் கோயிலுக்கு வந்து செல்வதும் சிறப்புடையது. மூலவர் சுப்பிரமணியர், அம்பாள் வள்ளி - தெய்வானையாகும். கந்த சஷ்டி பங்குனி, கார்த்திகை  மாதங்களில் கோயில் விசேஷமாக இருக்கும். மூலவர் திருச்செந்தூர் செந்திலதிபனைப் போல மிக அழகாக இருப்பார். கோயிலில் உள்ள முருகனின் வாகனமான  மயிலின் வாயில்  பாம்பு இருப்பது சிறப்புடைய அமைப்பு. நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் கோவானூர் சுப்பிரமணியரை தரிசிப்பது அனைத்திற்கும் சிறப்புடையது என்கின்றனர் பக்தர்கள்.