உடையவர் கோயில்
வீர கண்டான் ஊரணிக் கரையில் மேற்குப் பகுதியை விடுத்து மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில்களால் சூழப்பட்டுள்ளன, அதில் உடையவர் கோவில் என அழைக்கப்படும் இடம் இடிபாடுடன் கூடிய முகப்பு மண்டபமும் அதையொட்டிய பின்பகுதியில் கருவறையுடனும் அமைந்துள்ளது. உடையவர் என்பது ராமானுஜரின் 12 திருநாமங்களில் ஒன்றாக அழைக்கப்பெறுகிறது இக்கோவில் ராமானுஜருக்காக அமைக்கப் பெற்றுள்ளதை முகப்பு மண்டப தூண்களில் உள்ள ராமர் சிலை, ராமானுஜர் சிலையைக் கொண்டு யூகிக்க முடிகிறது, மேலும் இக்கோவில் பெருமாள் கோவிலை ஒட்டிய பகுதியிலேயே அமைந்துள்ளது. கருவறையில் சிலை ஏதுமில்லாமல் இடிந்த கற்கள் விழுந்து கிடக்கின்றன.
கல்வெட்டுகள்
சிறிதும் பெரிதுமாக 9 துண்டுக் கல்வெட்டுகளை கருவறை வெளிப்புற சுவரில் காணமுடிகிறது, முழுமை பெற்ற கல்வெட்டுக்களாக இருந்த கற்களை கட்டு இசைவுக்காக உடைத்து மேலும் கீழும் தலைகீழாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றுள்ளதையும் காண முடிகிறது.
கல்வெட்டுச் செய்தி.
கல்வெட்டு எழுத்து அமைதியைக் கொண்டு இவை பதிமூன்றாம் நூற்றாண்டாகக்கருதலாம், தெற்குப் பக்க சுவரில் நடுவாக அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றில், முன் பின் பகுதிகள் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஒரு சில சொற்கள் முழுமையாக உள்ளன.
ஒன்று 5 அரை மாவும்
_ _ஸ்ரீ சோணாடு கொ
தேவற்கு ஐஞ்சாவது முதல்
கெம எப்பேற்பட்ட இறை
தவிந்தமைக்கு கல்லிலே
என வரும் தொடர்களைக் கொண்டு ஸ்ரீ சோணாடு கொண்டருளிய/கொண்ட என்ற வரிகளாயின் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1216-1238) கல்வெட்டாக இருக்கலாம் என கருத முடிகிறது மேலும் மற்ற துண்டுக்கல்வெட்டுகளில் முழுமையான தொடர்பற்று சொற்கள் இருந்தாலும் வரி மற்றும் வரி தவிர்ந்தமை தொடர்பான செய்திகளே இடம் பெற்றிருப்பதாகக் கொள்ள முடிகிறது.
சூரக்குளம் ஐயனார் கோயிலில் துண்டு கல்வெட்டு.
சூரக் குளத்திலிருந்து வஸ்தாபட்டிக்கு ஊரணி பின்புறத்திலிருந்து காட்டு வழியாக செல்லும் பாதை பிரிவிலிருந்து பஞ்சாட்சரம் ஐயனார் கோவிலுக்கு செல்ல முடிகிறது. நல்ல அடர்ந்த காட்டிற்குள் அமைந்துள்ள இக்கோவிலில் நுழைவு வாயில் கீழ்ப்பகுதி சுவரின் கட்டுமானத்தில் ஒரு முழுமை இல்லா துண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.
இக்கல்வெட்டு செய்தியாவன
செக்கிறையும் தட்டன் பாட்டமும்
இவ்வாண்டு முதல் பள்ளிச்சந்த இ
_ _ இப்படி சந்திராதித்தவற்
_ _ _ _ அழகனான அழகிய பாண்
_ _ _ பற்றயுடையான திருப்பூவன
அரையன் வி என 13,14ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பள்ளிச்சந்தமாக பௌத்தம் அல்லது சமணக் கோயிலுக்கு சூரியன் சந்திரன் உள்ளவரை இறையிலியாக வரி வழங்கப் பெற்ற செய்தியை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். இவ்விரு கோவில்களிலும் இத்துண்டுக் கல்வெட்டுகள் முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் கற்களோடு வேறு இடத்திலிருந்து கட்டுமானத்திற்காக இங்கு கொண்டுவந்து சிதைக்கப் பெற்று கட்டப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
உடைந்த நிலையில் சிவ மூர்த்த சிலை.
வீர கண்டான் ஊரணியின் மேற்குப் பகுதியில் நீர்வரத்து மதகடிப்பகுதியில் இடுப்புக்கு மேல் பகுதி மட்டும் உள்ள பிளவுண்ட சிலை ஒன்று காணப்படுகிறது விரிசடையும் ஒரு கையில் உடுக்கையும் காணப்படும் இச்சிலையானது பைரவர் அல்லது வீரபத்திரர் சிலை அமைப்போடு உள்ளதாகக்கொள்ளலாம் இது சிவமூர்த்த சிலைகளில் ஒன்றாக இருக்கலாம். நாட்டரசன்கோட்டை கரிகாற்சோழிசுவரர் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இடிபாடுடைய மண்டபத்தில் 13 ஆம் நூற்றாண்டு, 10 துண்டுக்கல்வெட்டுகள் காணக்கிடைப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்று தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Track Alagar: சித்திரைத் திருவிழா: கள்ளழகர் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள “மதுரை காவலன்” செயலி!