பழனியில் 46 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளைப் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
பழனியை அடுத்த கீரனூரில் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1978 ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் அழைத்து வந்து மரியாதை செய்தனர்.
இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் பலரும் அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளிலும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்களாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தாங்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய உறுதுணையாக இருந்த பள்ளியையும், தங்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்களையும் மறவாமல் தங்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்து எடுத்துக் கூறி மகிழ்ந்தனர்.
மேலும் தங்களது ஆசிரியர் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர். தங்கள் படித்த அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்கள் படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். பள்ளியில் படித்து 46 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி அன்பை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது